பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘பட்டுக்கோட்டை’யின் பாடல்கள்

429


எளிய சொற்கள்! ஆழமான பொருள்! நினைந்து இன்புறத்தக்க உவமை. இக்கவிதைதான் நம்மைப் பட்டுக்கோட்டையாரிடம் ஈடுபடுத்தி ஆற்றுப்படுத்தியது.

அடுத்து மனித வாழ்வு துன்பப் படுகுழிகளும், இன்ப மேடுகளும் விரவிக் காணப்படுவது. படுகுழிகளே அதிகம். மேடுகள் குறைவிலும் குறைவே. பலர், துன்பங்களைக் கண்டபோது துவண்டு விடுவர். அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமில்லை. இருக்கவும் முடியாது. அதனாலன்றோ திருவள்ளுவரும் கூட,

'இன்பம் விழையான்
இடும்பை இயல்பென்பான்'

என்றார். துன்பங்கள் அறிவைத் தூண்டி வளர்க்கும். ஆற்றலைப் பெருக்கும். இக்கருத்து, அறிவும் தெளிவும் பொருந்திய முற்போக்குக் கருத்துடைய மனிதனுக்கே விளங்கும். கவிஞர், மிக அழகாக, இக்கருத்தை வலியுறுத்துகின்றார், "துயரிதனைக் கண்டே பயந்து விடாதே, சோர்வை வென்றாலே துன்பமில்லை" என்கிறார். இக்கவிதையின் ஈற்றடிகள் நண்பர்களின் நிலைமைகளையும் விமரிசனம் செய்கின்றன.

கவிஞர் கடவுள் நம்பிக்கையை மறுக்கின்ற முற்போக்குப் பாரம்பரியத்தைச் சார்ந்தவர். எனினும், கண்மூடித் தனமாகக் கண்டபடி கடவுள் நம்பிக்கையை இழித்துப் பேசவில்லை. மாறாகக் கடவுள் நம்பிக்கை தோன்றி வளர்வதற்குதவும் நற்கருத்துக்களைக் கூறுகிறார். சமயத் துறையில், சமய நிலையங்களில் புகுந்துள்ள கேடுகளை விளக்குகிறார். நடுநிலை உணர்வோடு சிந்தித்தால் யாரும் கவிஞரின் கருத்தை மறுக்க முடியாது.

கவிஞர், தூயபக்தி மலரவேண்டும் என்று கூடப் பேசுகின்றார். ஆனால், பக்தி பக்திக்காகவே இருக்க வேண்டுமே யொழிய சுண்டலுக்காக இருக்கக்கூடாது