பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொழுதை விடியச் செய்வோம்

437


மலருமானால் போர் ஒடுங்கும்; அமைதி நிலவும். மக்கள் குலம் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

பட்டுக்கோட்டை நல்வாழ்வு தோன்ற நாள் குறிக்கின்றான். பஞ்சாங்கத்தைப் பார்த்தல்ல. தமது சிந்தனையால் குறிக்கின்றான். அந்த நாள் எது?

"ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும்
தேதியில் தோன்றும் பெருமை"

ஆம்! சாதிக் குட்டிச்சுவர்களால் இன்று கிராமம் சிதறுண்டு கிடக்கிறது. சாதிகள் வரவர இறுக்கமாகப் போய்க் கொண்டுள்ளன. என்று இந்த நாட்டின் ஜாதிகள் ஒன்று சேரும்? என்று இந்த நாட்டு மக்கள் இந்தியராவர்?

இன்று பொய்ம்மை ஒழுக்கம்! சொல் வேறு செயல் வேறு. பட்டார் யாண்டும் வளர்ந்து வருகின்றனர். கண்டால் அன்பொழுகப் பேசுகின்றனர்! ஆனால் அவர்களுடைய செயலில் அன்பு இருப்பதில்லை. நாம் நாள்தோறும் பேசிவரும் அன்பு செயலுக்கு வந்தால் இந்தப் புவியிலேயே, இங்கே, இப்பொழுதே பேரின்பத்தைக் காணலாம் என்று கவிஞன் உறுதியாகக் கூறுகின்றான். சென்ற கால வரலாற்றில் காணாத வளத்தைக் கண்டிடலாம்! ஆம்! இந்த உலகின் வளம் நிறைய உண்டு. மனிதன் அன்பு இன்மையால் வளத்தைப் பொதுவாக்க மறுப்பதால் வளம் சுருங்குகிறது. எல்லா நலத்திலும் சிறந்தது மன நலம்! அம்மனநலம் மாறாதிருப்பின் இம்மண்ணில் விண்ணகத்தைக் கண்டிடலாம்.

"நான் வந்து சேர்ந்த இடம்" என்றொரு சிறந்த கவிதை உண்டு.

"நான் வந்து சேர்ந்த இடந்தான் நல்ல இடந்தான் -
இதை
நம்பவைக்கும் பொறுப்பு அன்பினிடந்தான்"