பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தானே அடுத்து நிகழும்! ஆதலால், "கிருதயுகம் எழுக மாதோ!” என்கின்றான்.

கலியுகம், தனி உடைமையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கிருதயுகம், பொது உடைமையைப் பிரதி நிதித்துவப் படுத்துகிறது. பொதுவுடைமைச் சமுதாயம் என்பது உரிமைகள் நிறைய உடைய சமுதாய அமைப்பு. பொது வுடைமைச் சமுதாயத்தில் “எல்லாம் எல்லாருக்கும்” என்ற நியதி கால் கொள்ளும். பொதுவுடைமைச் சமுதாயத்தில், ஒருவர் எல்லாருக்காகவும் வாழ்வார்; எல்லாரும் ஒருவருக்காகவும் வாழ்வர். இத்தகு பொதுவுடைமைச் சமுதாயத்தில் ஒரு மனிதர் மற்றொரு மனிதர் நோக வாழ மாட்டார்; ஒரு மனிதர் மற்றவர் உணவை அடித்துப் பறித்துத் தின்ன மாட்டார். உரிமைகள் போற்றப்பெறும். எப்பொழுது? ஒருவர் உரிமை மற்றவர் உரிமையைப் பாதிக்காத பொழுதுதான்! இதனை பாரதி,

"மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ ?-புலனில்
வாழ்க்கை இனியுண்டோ ?-நம்மிலந்த
வாழ்க்கை இனியுண்டோ ?
(பாரத சமுதாயம்-1)

என்று கேட்கின்றான்.

குடிமக்கள் நலனுக்காகக் குடிமக்கள் சொன்னபடி ஆளும் ஆட்சியாக அமைய வேண்டும். குடிமக்கள் சொன்னபடி என்றால் கவனத்திற்குரியது. குடிமக்களும் குடிகள் மேன்மையுறத்தக்கன. சொல்ல வேண்டும்; வல்லாண்மையுடையோர் அறியாமையில் ஆழ்த்தியும், கையூட்டு வழங்கியும் அச்சமுறுத்தியும் பெரும்பான்மையைத் திரட்டி வைத்துக் கொண்டு 'குடிமக்கள் குரல்' என்று சொல்வது பொதுவுடைமையாகாது; மக்களாட்சியும் ஆகாது.