பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

444

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்தவர்கள்! ஆதலால், கவிஞன் பாரதி, புதிய கோணங்கியில்,

"படிப்பு வளருது, பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான், போவான் ஐயோவென்று போவான்!"

என்கிறான்.

(பாரதியார் கவிதைகள் பக். 221 புதிய கோணங்கி)

படித்தவர்களை மக்கள் நம்புகின்றனர். ஆதலால், படித்தவர்கள் சூது பண்ணக்கூடாது. சென்ற காலத்திலும் சரி, இன்றும் சரி படித்தவர்களில் பலர் - சாதாரண மக்களுக்கு எதிராகச் சூது செய்து கொண்டு தான் வருகின்றனர்! என்று இந்தச் சூது ஒழியும்!

கல்வி என்பது ஆன்மாவில் ஏற்றப்படும் ஒரு ஒளி!அணையாது ஒளிவிடும் ஒளி! கல்வி, மனிதனின் பொறி, புலன்களுக்கு அர்த்தம் கற்பிப்பது; படைப்பாற்றலை வழங்குவது; அறிவியல் ஆளுமையை வழங்கி, மனிதனை முழுமைப்படுத்துவது; மானிடம் வெற்றி பெறத் துணையாய் அமைவது.

இன்றைய கல்வி இப்படியா இருக்கிறது? மூளையில் செய்திகளைத் திணிக்கிறார்கள். வினை - விடைகளாக உருப்போட வைக்கிறார்கள்; நினைவாற்றலைச் சோதிக் கிறார்கள். மதிப்பெண் வழங்குவதிலும் "தர்மம்" புகுந்திருக்கிறது. தன்னம்பிக்கையும், திறமையும், ஆளுமையும் இம்மியும் இல்லை! ஆதலால், எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் சான்றிதழ்களைத் தூக்கிக் கொண்டு "வேலையோ வேலை" என்று அலைகின்றார்கள். . .

இதற்காகவா பட்டம் என்று, கவிஞர் குலோத்துங்கன் கேட்கின்றார். "பட்டம் என்பது வருந்தப் பாடுபடாமல் உண்பதற்குரிய உரிமமா?” என்று கேட்கின்றார். ஏன்? எதனால்? என்று ஆழ்ந்துணரும் இயல்பாவது இருக்கிறதா? அதுவும் இல்லை.