பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்

451


களைத் தவிக்கச் செய்கிறாயே, நியாயமா என்று கோபத்துடன் கேட்கும் மனைவியும் அவன் மனக் கண்களுக்குத் தெரிந்தனர்! எதிரே நின்றவரோ, பண்ணைக் கணக்கப்பிள்ளை! அரிவாள் இருக்குமிடம் சென்றான்.

'அப்பா, குலையை வெட்டப் போறாரு - செவ்வாழைக் குலை' - என்று ஆனந்தக் கூச்சலிட்டுக் கொண்டு, குழந்தைகள் கூத்தாடின. செங்கோடனின் கண்களிலே நீர்த்துளிகள் கிளம்பின! குலையை வெட்டினான்! உள்ளே கொண்டு வந்தான்! அரிவாளைக் கீழே போட்டான்!

"குலையைக் கீழே வை அப்பா, தொட்டுப் பார்க்கலாம்” என்று குதித்தன குழந்தைகள்! கரியனின் முதுகைத் தடவினான் செங்கோடன். "கண்ணு! இந்தக் குலை, நம்ம ஆண்டைக்கு வேணுமாம் கொண்டு போகிறேன் - அழாதீங்க - இன்னும் ஒரு மாசத்திலே பக்கத்துக் கண்ணு மரமாகி குலைத் தள்ளும், அதை உங்களுக்குக் கட்டாயமாகக் கொடுத்துவிடறேன்” என்று கூறிக்கொண்டே, வீட்டை விட்டுக் கிளம்பினான், குழந்தையின் அழுகுரல் மனதைப் பிளப்பதற்குள்."

இந்தப் பகுதி நம் உள்ளத்தை உருக்குகிறதல்லவா?

உழைப்பு - வேலை, அதாவது உழைக்கும் ஆற்றலைக் கருவியாகக் கொண்டு செய்யப்படுவது வேலை! உழைப்பின் ஆக்கமே வேலை!

இந்த நிலவுலகில் உழைத்து உண்ணவேண்டும் என்ற ஆர்வலர்களுக்கு எங்கும் வேலையுண்டு! அவர்களே தங்களுக்குரிய வேலையை உருவாக்கிக் கொள்வர். தாமே வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்பவர்கள், தகுதி மிகுதியும் உடையவர்கள்! உழைப்பால் மட்டுமே அவர்கள் வாழ விரும்புவார்கள்!

இத்தகைய ஆர்வம் இன்று பலரிடம் இல்லை! இன்று வேலை தேடுகிறார்கள்! வருகைப் பதிவேட்டோடும் ஊதியத்தோடும் தொடர்புடைய வேலையையே விரும்புகிறார்கள்! இவர்களுக்குக் கடின உழைப்பில் நாட்டமில்லை;