பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

452

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இத்தகையோர் வேலை தேடு படலத்தில் ஈடுபடுகின்றனர்; உண்மையாக அல்ல - ஒப்புக்காகவே!

சிறுகதை ஆசிரியர் வல்லிக் கண்ணனின் "வாழ விரும்பியவன்" என்ற படைப்பில் ஒரு பகுதி.

"அவர்களுக்கு 'வேலை' என்று எதுவுமில்லை. தேடி வந்து சேராத - எங்கே எப்படிக் கிடைக்கும் என்றே தெரியாத - ஏதாவது ஒரு வேலையைத் தேடிக் கொண்டிருப்பதாகத்தான் பாஸ்கரனும் அவனைப் போன்ற நண்பர்களும் சொல்லித் திரிந்தார்கள்” என்று வேலை தேடுவோரின் நிலையை சித்திரித்துக் காட்டுகின்றார் வல்லிக்கண்ணன்.

இத்தகையோரால் நாடு வளருமா? நாட்டு அரசுகள் வேலை வாய்ப்பை உண்டாக்குவதற்கு தமது திட்டங்களில் முன்னுரிமை தந்து வழங்கவேண்டும். அதே நேரத்தில், இளைஞர்களும் காத்துக் கொண்டு இராமல் சுயவேலை வாய்ப்புக்களில் ஈடுபட வேண்டும். முன்னுக்கு வரவேண்டும் என்ற துடிப்பு இருந்தால் இன்று எதையும் செய்யலாம். அவ்வளவு வாயில்கள் இன்று அமைந்துள்ளன.

"வாழ்க்கை சிறப்புற அமைய, போர்க்குணம் தேவை" என்றான் மாமேதை லெனின், அறியாமை, வறுமை, ஏழ்மை இவற்றை எதிர்த்துப் போராடும் போர்க்குணம் வேண்டும். போர்க்குணம் இல்லாத வாழ்க்கை பிண வாழ்க்கை. தொ.மு.சி. ரகுநாதன் தமது 'பஞ்சும் பசியும்' நாவலில்,

"போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
போராடுவோம்! வெற்றி பெறுவோம்!”

என்று, முழங்குவதைக் கேளுங்கள்!

ஒரு சமுதாயத்தில் எவை எவை மதிக்கப்படுகின்றனவோ, அவற்றைப் பொறுத்தே அந்தச் சமுதாயத்தின் நடைமுறை அமையும்; வரலாறு நிகழும்!

பொதுவாக, மனித மதிப்பீடு - "நீதி சார்ந்த மதிப்பீடு!"

"ஒழுக்கச் சார்பான மதிப்பீடு!", "பண மதிப்பீடு!" என்றெல்லாம் அமையும்.