பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

462

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இணைத்துத்தான் எதுவும் மதிப்பிடப்படுகிறது! இது பெரும் பிழை!

மந்திரங்களைக்கூட காசுக்கு ஏற்றவாறு குறைவாகக் கொடுத்தால் சுருக்கியும், நிறைய கொடுத்தால் நீட்டி முழக்கியும் சொல்லும் புரோகிதர்கள் இருக்கிறார்கள்! இது தவறு என்று விளக்க, சொல் விளங்கும் பெருமாள் "வெள்ளையங்கி"யில் முயற்சி செய்கிறார்.

'பெரிய வாத்தியார்' காசுக்கேற்றவாறு மந்திரத்தைக் கூட்டியும் குறைத்தும் சொல்ல இணங்கியதை இராமையர் நினைந்து சொல்லுவதாக, சொல்விளங்கும் பெருமாள் எழுதுகிறார்.

"நீங்கள் நியாயமாக நடங்கள் என்று சொன்னால், மற்றவர்களை நியாயமாக நடக்கவில்லை என்று கூறுவது அதற்குப் பதிலாகிவிடாது" என்பது இராமையர் பெரிய வாத்தியாரைப் பற்றி நினைந்து சொல்வதாகும். இன்று நாம் நம்முடைய சமூகத்தில் அடிக்கடி கேட்பது இத்தகைய வாதத்தைதான்.

ஒருவர் செய்த தவறுகளை எடுத்துக்காட்டினால் "நீங்கள் செய்யவில்லையா?" என்று மிக்குயர்ந்த இடத்தில் இருப்பவர்கள்கூட கேட்டுவிடுகிறார்கள். இதனைத் திறமை என்று வேறு பலர் மதிக்கின்றனர். இது ஒன்றும் திறமை இல்லை. வீண் பகடித்தனம். எடுத்துக்கூறும் நியாயங்களை எடுத்துக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். அன்றுதான் நியாயத்தை நோக்கி, சமுதாயம் நடைபோடும்.

விவாதத்திலும் ஒரு சரியான நடைமுறை கையாளப் பெறவேண்டும். கிளர்ச்சி நோக்கத்தோடு விவாதித்தல் கூடாது.விவாதம் செய்தவரை மடக்கி, மண்டையில் அடித்து உட்கார வைக்கும் இழி மனப்பான்மையுடனும் விவாதிக்கக் கூடாது. விவாதத்தில் ஈடுபடுவோரிடையே நம்பிக்கையும் நல்லெண்ணமும் நிலவ வேண்டும்.