பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்

463


விவாதத்தின் நடைமுறை விதிகளைப் பின்பற்ற வேண்டும்; ஒவ்வொரு மனிதனுக்கும் மூளை - சிந்தனைப் புலன்கள் இருக்கின்றன. இவை நிச்சயமாக எல்லாருக்கும் ஒன்றுபோல இல்லை. விவாதங்களில் கலந்து கொள்ளுபவர்கள் இயற்கையில் உள்ள இந்த வேற்றுமைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

எவனொருவன், தான் பேசுவதுதான் நியாயம் என்று வரையறுத்துக்கொண்டு, முரட்டுத்தனமாகப் பேசுகின்றானோ, அவன் நியாயத்தை மீறுகிறவன். அவன் நியாயத்தை மீறுகிறவன் மட்டுமல்ல; அவன் உலகத்தில் பல அநியாயங்களை அரசியலிலும் சில்லறை கிளர்ச்சிகளிலும் தோற்று விப்பான் என்று வங்கத்துக் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் கூறுகின்றார். இதைத் தமது நல்ல வரன் என்னும் கதை வரிகளில் விளக்குவதைக் கேளுங்கள்.

"மனிதனுக்கு மனிதன் வேற்றுமை உண்டு. ஒருவன் யுக்தி மற்றவனுக்குச் சரிப்படாது. ஒருவன் தான் பேசுவது தான் நியாயம் என்றால், அவன் நியாயத்தை மீறினவனாகிறான். இதனால் அநியாயங்கள் உலகத்தில் தலைவிரித்தாடும். அரசியல் அல்லது சில்லறைக் கிளர்ச்சியில் பற்றுடையவர்கள் இதைக் கவனித்தல் நலம்."

(நல்லவரன் - தாகூர் பக். 38)

அடுத்து, மனித உலகத்தை அலைக்கழிக்கும் மிகப் பெரிய சிக்கல் வெற்றி - தோல்வி என்பவைகளாகும். நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது. வெற்றி - தொடர் வெற்றிகளாக ஒருபோதும் இருப்பதில்லை. தோல்விகளும் அவ்வாறே.

ஆதலால், வெற்றி - தோல்விகளைப் பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் எது நடக்க வேண்டுமோ அது நடக்கத் தக்க வகையில் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.