பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

466

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொண்டிருக்கலாம். ஆனால், நாம் அப்பகைவன் மீது பகை கொள்ளக்கூடாது. இது வாழ்க்கை நியதி.

இந்தப் பொல்லாத பகை இன்று வீட்டிலும் புகுந்து விளையாடுகிறது; நட்புக் களங்களிலும் புகுந்து விளையாடுகிறது. அரசியலிலோ சொல்ல வேண்டாம். எழுத்தாளர் அய்க்கண் தமது வேர் என்ற கதையில், கணவன் - மனைவி தகராறைத் தீர்த்து வைத்த கருப்பையா அம்பலகாரர், 'தாம் தகராறைத்தான் தீர்க்க முடிந்தது; பகைமையைத் தீர்க்க முடியவில்லை" என்று கூறுவது சிந்திக்க வேண்டியது.

"அந்தத் தகராறைத் தான் என்னாலே தீர்க்க முடிஞ்சுது. அவங்க பகைமையைத் தீர்க்க முடியலே!”

(வேர் - அய்க்கன் - பக். 18)

பகைமையை மாற்றிக் கொள்ளாதவர்களுக்குக் கணவன், மனைவி என்ற உறவு என்ன வேண்டியிருக்கிறது?

ஒரு சமுதாயம் சிறப்புற இயங்க, பொதுப்பணிகள் நடைபெற வேண்டும். பாரதிதாசன், பொது நாட்டம் உடையார் வேண்டும்' என்றான். இன்று, பொது நாட்டம் உடையார் நம்மிடையில் உளரோ? பொதுப்பணியில் நினைவுமிருக்கிறதோ? பொருளும் புகழும் சேர்ப்பதைப் பற்றியே கவலை.

யாராவது ஒருவருக்குப் பொதுப் பணியில் நாட்ட மிருந்து திட்டம் தீட்டினால் அதை நிறைவேற்ற முடியாத நிலை! ஏன்? கூட்டாளிகள் சரியில்லை.

ஆம். பல நூறாண்டுகளாகவே தீண்டாமையை ஒழிக்கத் திட்டம்; நடந்ததா? ஏழ்மையை ஒழிக்க ஐந்தாண்டுத் திட்டங்கள்! ஒன்றா, இரண்டா? ஏழு ஐந்தாண்டுத் திட்டங்கள்! ஏழ்மை அகன்றதா? ஏன்? கூட்டாளிகள் சரியில்லை! நாம் கூறவில்லை. மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை பாடுகிறான்.