பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

470

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சமுதாய வாழ்க்கையில் வளர்ச்சி இருக்கவேண்டும். வளர்ச்சிக்கு வாயில் மாற்றங்கள். எங்கு மாற்றமில்லையோ அங்கு வளர்ச்சியில்லை. அதுபோலவே எங்கு வளர்ச்சியில்லையோ அங்கு மாற்றமில்லை.

நம்முடைய சமுதாயம் நீண்ட நெடு நாட்களாகவே மூடத்தனத்தில் முடங்கிக் கிடக்கிறது. எந்தவொரு மூடத்தனத்தினின்றும் நாம் விடுதலை பெற்றோமில்லை. விடுதலை பெற முடியாத நிலையில் பொய்மைச் சாத்திரங்களும் மதங்களும் தடை செய்கின்றன. காதலிலிருந்து கடவுள் சந்நிதி வரை சாதிகள் ஆட்சி செய்கின்றன. நாளும் தன்னம்பிக்கையைக் கொல்லும் மூட நம்பிக்கைகள் ஏராளம்! ஏராளம்! எனவேதான் பாவேந்தன் பாரதிதாசன்,

"முடத்தனத்தை முடுக்கும் மதத்தை நிர்
மூலப்படுத்தக் கை ஓங்குவீர்!"

(பாரதிதாசன் பா. 50 பக். 160)

என்று முழங்குகிறான்.

இன்று கோயில்களில் கூட காசுகளின் ஆதிக்கம்; மேலும் களவு நடைபெறும் இடங்களாகவும் கோயில்கள் ஆகிவிட்டன. அன்னை பராசக்தி, அருள்புரிய எழுந்தருளியுள்ளாள். ஏழை எளியவர்கள் படும் பாட்டைக் காண முடியாமல் அவளுக்குச் சாத்தும் வெள்ளிக் கண் மலர்கள் அவள் கண்களை மறைக்கின்றன.

மக்கள் அழுது அரற்றும் மொழியை அவள் கேட்க முடியாமல் மணியோசை ஒலித்துத் தடுக்கிறது. இல்லங்கள் தோறும் அவள் எழுந்தருளி, தம்மைத் தொழும் மக்களுக்கு இன்ப நலம் வழங்கலாம் என்று எண்ணினால், அதுவும் இயலாத நிலையில் பூசாரி பூட்டைப் போட்டு பூட்டி விடுகிறான்.

மானுடத்தை வாழ்விக்கும் மிக உயர்ந்த கடவுட் கொள்கை தகாதார் வயப்பட்டுக் கெட்ட கேட்டினைப் பாருங்கள்! இதனைப் பட்டுக்கோட்டை,