பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

41


கொண்டான். இந்திய நாட்டுக்குக் கல்வியில் பஞ்சமா? இந்திய நாட்டு மக்கள் ஆண்டுதோறும் மறக்காமல் கலை மகளுக்குப் பூசை போடுவார்கள். அப்பம், அவல், பொரிஇவற்றுக்குப் பஞ்சமில்லை. இவற்றைக் கலைமகள் முன்னால் படைத்து வயிறு புடைக்கத் தின்பார்கள். பிறிதொன்றையும் மறந்து விடாதீர்கள்! ஏடுகளை வரிசையாக அடுக்கி மந்திரங் களை முணுமுணுத்து வணங்குவர். ஆனால், ஏடுகளைப் பிரித்துப் பார்ப்பதுமில்லை; படிப்பதுமில்லை. இவை கலைமகள் பூசைக்குரிய நெறியல்ல என்று பாரதி எடுத்துக் கூறுகின்றான். ஏன், பாரதி நல்லறங்கள் பலவற்றைப் பட்டியல் போடுகின்றான். நிழல் தரும் கனிச் சோலைகள் அமைத்தல், சுவைமிக்க தண்ணீர் தரும் ஊற்றுக்கள் அமைத்தல், பசித்தவர்க்குச் சோறிடும் அன்ன சத்திரங்கள் அமைத்தல், ஆலயங்கள் கட்டுதல் இவையெல்லாம் அறங்கள்! ஆனால், இந்த அறங்களைவிடச் சிறந்த அறம் ஒன்று உண்டு. அஃது ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தலாகும். அது பேரறம் என்று சொல்கின்றான்.

"இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம்பதினாயிரம் நாட்டல்;
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்;
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்.
(வெள்ளைத் தாமரை-9)

என்று பாடுகின்றான்.

கல்லியை மக்கள் தேடிச் சென்று பயிலும் நிலையில் , விடாமல் அவர்களுக்கு எளிதில் கல்வி கிடைக்க வேண்டும். அதுவும் அச்சடித்ததைப் போல ஒரே பள்ளியாக- ஒன்றையே

கு.VI.4.