பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கற்கும் பள்ளியாக இருத்தல் கூடாது. பல மொழிகளை, பல தொழில்களை, பல கலைகளை எளிதில் கற்கத் தக்கவாறு பலப்பல பள்ளிகள் அமைய வேண்டும் என்று பாரதி ஆசைப் படுகின்றான். கல்வி மட்டும் வாழ்க்கையை வளர்த்து விடாது. வாழ்க்கை பொருளுடையதாக, சுவையுடையதாக, மகிழ்வு நிறைந்ததாக அமைந்து விளங்கவேண்டும். வாழ்க்கையில் வறட்சித் தன்மையை விரட்டியடிக்க வேண்டும். இத்தகு புத்துணர்வுடைய வாழ்க்கையை அமைத்துத் தருதல் கலைக்கே உண்டு.

வீடுகள் துக்கத்தின் களமாக இருக்கக் கூடாது. இன்று பல வீடுகள் மகிழ்ச்சி தருவனவாய் இன்மையின் காரணமாக உணர்வையும், ஒழுக்கத்தையும் கெடுக்கும் வெளிப்புறச் சூழல்களுக்கு வீட்டிலுள்ளோர் மனம் தாவுகிறது. அங்கன மின்றி வீடுகள் கலையின் விளக்கத்துடன் அமையுமாயின் அவை சிறப்புறும். வீட்டிலுள்ளோர் வாழ்க்கையும் சிறப்புறும், இதனை நன்குணர்ந்த பாரதி, "வீடுதோறும் கலையின் விளக்கம்” வேண்டுமென்று பாடுகின்றான்.

பாரதிக்கு, வாழ்க்கையைச் சுவைத்து மகிழ்ந்து வாழத் தெரியும். அங்ஙனம் எல்லாரும் வாழ வேண்டுமென்று விரும்புகின்றான். பாரதி, குடும்பத் தலைவனாக எப்படி வாழ வேண்டும் என்றும் கற்பனை செய்கின்றான். காணி நிலம் வேண்டும். அந்தக் காணி நிலத்தின் நடுவே அழகுற அமைந்த மாளிகை வேண்டும். வீட்டுக்கும் நிலத்துக்கும் தண்ணீர் தரும் கிணறு வேண்டும். அக் கிணற்றோரத்தில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள் வேண்டும். அத் தென்னை மரங்கள் இளநீர்க் குலைகளோடு விளங்குதல் வேண்டும். உடலுக்குக் குளிர்ச்சி தந்து, உயிருக்கும் . இதம் தரும் தென்றற்காற்று வீச வேண்டும். மாளிகை முற்றத்தில் முழு நிலாப் பொழிவு வந்து சேர வேண்டும். குயில் மெல்லிசை இசைக்க வேண்டும். பாட்டுக் கலந்திட ஒரு பத்தினிப் பெண் வேண்டும். கூடிக் கலந்து மகிழ்ந்திடும் பொழுது கவிதை