பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொண்டு எல்லாருக்கும் கல்வி கொடுப்பதை நாட்டுக் குடியரசு, கடமையாகக் கொண்டது, எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கொண்டு வருகிறது. ஏன்? கலியுகத்தில் பிறந்து கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்குக் கூட முதியோர் கல்வி வகுப்புக்களைத் தொடங்கி இன்று கல்வியை வழங்கி வருகிறது மக்களாட்சி. இன்று பாரதியே இந்த மண்ணுக்கு வந்தாலும் அவன் கல்வியில்லாத ஊரைத் தேடிப் பார்த்தாலும் காண முடியாது. இந்த வகையில் பாரதியின் ஆணை நிறைவேற்றப் பெற்றிருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை. ஆனால், பாரதி நினைத்ததைப் போலப் பல வகைக் கல்வி தரும் பல வகைப் பள்ளிகள் தோன்றவில்லை. நாள் முழுதும் ஒரே வகுப்பறையில் வளரும் தலைமுறை அடைக்கப்பட வேண்டுமா? காலையில் எண் எழுத்தோடு கூடிய படிப்பு, மாலையில் தொழிற் படிப்பு, பின்மாலையில் கலைப் படிப்பு என்றெல்லாம் படிக்கும் வாய்ப்புகள் இந்த நாட்டு இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டும். இத்துறையில் நம் அரசுகளின் கவனம் செல்வது நல்லது. எனவே, பாரதி ஒரு யுகச் சந்திப்புக் கவிஞனாகிறான்.

பாரதி, கல்வியில் ஆர்வம் காட்டினாலும், பலப்பல கற்க வேண்டுமென்று எடுத்துக் கூறினாலும் வீட்டு மொழியும் நாட்டு மொழியும் கற்காமல் வேறு வேறு மொழிகளைக் கற்பதை பாரதி விரும்பவில்லை. விரும்பாதது மட்டுமன்று; வெறுக்கிறான், வீட்டு மொழியாகிய தமிழ் வளர வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். அவனறிந்த மொழிகளிலே தமிழ்தான் இனிமையானது என்று போற்றி மகிழ்கின்றான். அவன் அறிந்த உலகக் கவிஞர்களிலே கம்பனையும் வள்ளு வனையும் இளங்கோவையும் போல் பூமியில் எங்கேயும் பிறக்கவில்லையென்று கூறிப் பெருமைப் படுகின்றான். ஏன், மேற்கே வளர்கின்ற புத்தம் புதிய கலைகளெல்லாம் தமிழில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று விரும்புகின்றான். .