பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

45


இவை தமிழில் வராது என்று யாரோ ஒருவன் சொல்லுகிறான். இச்சொல் அவச்சொல் என்று பாரதி நினைக்கின்றான்; ஆற்றொணாத் துயருறுகின்றான்; அந்த அவச்சொல் நீங்க,

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்!”

என்று தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுகின்றான்.

பாரதி, தமிழில் ஒன்றுமில்லை; ஆங்கிலத்தில்தான் எல்லாம் இருக்கிறது என்று சொல்கிற அடிமைப் புத்தி நிறைந்த கலியுகத்தில் பிறந்தான்; வாழ்ந்தான்; வளர்ந்தான். அவன் கலியுகத்தில் தமிழ்த் தாய்க்கு இழைத்த கொடுமையை மாற்ற நினைக்கின்றான். தமிழ்த்தாய் அனைத்துத் துறையிலும் வளர்ந்து பொலிவுற அமையுமாறு தமிழ் மக்களைத் தூண்டு கின்றான். இத்துறையில் தமிழக மக்கள் முழுமையாகக் கலியுகத்தை மாய்த்துவிடவில்லை. இன்னமும் தமிழ், அறிவியல், தொழிலியல் மொழியாக வளர்ச்சியடைய வில்லை. தமிழக இளைஞர்கள் இவ்வகையில் போதிய முயற்சி களை மேற்கொள்ள வேண்டும். பாரதி, எண்ணிக்கையில் பல நூல்களைக் கற்க வேண்டும் என்று விரும்பவில்லை, நூல்கள் காடுகள் போல் மண்டலாம். பயனற்ற நூல்களைப் படிப்பதில் என்ன பயன்? மெய்ம்மை விரித்துரைக்கும் நல்ல நூல் ஒன்றைத் தேடிக் கற்க வேண்டும். அந்நூலுக்கு இசைந்தாற் போல் வாழவேண்டும். எந்தக் கருத்தோடும் யாரும் மாறுபட முடியும். மாறுபாடு கொள்ளுதலுக்கு எளிதில் இடம் கிடைக்கும். மாறுபாட்டினைக் கொண்டு வாதங்களை நீட்டிப்பது வாழ்க்கை நெறிக்கு உகந்ததன்று, கலியுகத்தில், படித்தவர்கள் அதிகம். ஏதோ ஒரு வகையில் பெரியவர்கள் என்று நம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களும் கூட அற்பச் செய்திகளின் காரணமாகக் கூட மாறுபட்டுப் போட்டிகளை வளர்த்திருக்கின்றனர், வாதப் பிரதிவாதங்களை வளர்த்திருக்