பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போக்கிலும் கூட குழந்தைகளின் சிந்தனைகளை வளர்க்க புதிய கோணங்கியாக நின்று பாடுகின்றான். கலியுகத்தின் கொடுமைகளைப் பார்த்து, திகைத்து நிற்கும் குழந்தைகளைப் பார்த்து பலன் சொல்பவன் போல கிருதயுகத்துக் குணங்களைச் சொல்லுகிறான்; கிருதயுகத்துச் செயல்களைச் சொல்லுகிறான். பாரதி, கலியுகத்தில் தோன்றி வளர்ந்த ஜாதிகள் எல்லாம் ஒரு குலமாகச் சேருது; சாதிச் சண்டைகள் போகுது என்று சொல்லுகிறான். கலியுகத்தின் பரிசாக இருந்த தரித்திரம் போகுது; கிருதயுகத்தின் கொடையாகச் செல்வம் பெருகுது என்கிறான். செய்யத் தக்கனவும் தகாதனவும் அறிந்து, பாவங்களைச் செய்யாது தவிர்க்க உதவும் படிப்பு வளருது என்கிறான். இதனைக் கேட்டவர்கள் படித்தவர்கள் சூது பண்ணுகிறானே என்று கேட்கின்றனர். படித்தவன் தானே சாமர்த்தியமாகச் சூது செய்கின்றான். ஆம்! இந்த நாடு இவ்வளவு இழி நிலைக்கு வந்ததற்குக் காரணம் படித்தவர்கள் என்ற பெயரில் அரைகுறைகள் செய்த சூதுகள் தான் காரணம் இல்லையானால் உழைப்பவருக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்பவருக்கு ஒரு நீதி என்றெல்லாம் இருக்குமா? இங்ஙனம் சொல்லும் நீதி சாத்திரங்களைச் சாத்திரமன்று என்று மறுத்து சதியென்று கூறுகின்றான். ஆதலால் படித்தவனாக நடித்துக் காட்டி நம்பிக்கையை உண்டாக்கிக் கொண்டு சூது பண்ணினால் ஐயோ என்று போவான் என்று பாரதி கடுமையாகவே சொல்கிறான்.

"படிச்சவன்சூதும் பாவமும் பண்ணினால் ஐயோ
என்று போவான். போவான்!”

என்று ஆத்திரமடங்கக் கூறுகிறான்.

ஆக, கிருதயுகத்தில் படித்தவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். சமூகத்திற்குத் தீமை செய்யமாட்டார்கள்; எந்தக் காரணத்தை முன்னிட்டும் சமூகத்தில் பிரிவினைகளை, பேதங்களை உண்டாக்க மாட்டார்கள். சமூகத்தின்