பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே தொழிலாளி வாழ்வான் என்று சொல்லுகிறான்.

பாரதி, கடவுள் நம்பிக்கையுடையவன். அழுத்தமான கடவுள் நம்பிக்கையுடையவன். ஆயினும் அவனுடைய கடவுள் நம்பிக்கை கலியுகச் சார்புடையதல்ல. மானிட சமுதாயத்தில் மதத்தை வளர்ப்பதற்காகச் சிந்திய வேர்வையை விட, மதச் சண்டைகளில் சிந்திய செங்குருதி மிகுதியென்பதை வரலாற்று ஏடுகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. கடவுள் உண்டா? இல்லையா? இவர்தான் கடவுள். அவர்தான் கடவுள் என் மதமே மதம் என்றெல்லாம் சண்டை போடுவது சிறுபிள்ளைத்தனம். கடவுள் உண்டு என்று ஒருவர் கூறுவதாலேயே அவர் கடவுளை மற்றவர் களுக்குக் காட்டிவிடப் போவதில்லை. ஒருவர் கடவுள் இல்லையென்று கூறுவதாலேயே உள்ள கடவுளை இல்லாமற் செய்துவிடப் போவதில்லை! ஆம். அது போலவே எல்லாப் பொருள்களிலும் எங்கணும் நீக்கமற நிறைந்திருக்கும் பொருளே தெய்வம். அஃதொன்றே தெய்வம். பலர் வணங்கும் தெய்வம். அத்தெய்வத்தை எப்பெயர் கொண்டு எவர் வாழ்த்தினால் என்ன? தீ வேள்வியை செய்து வணங்கும் பார்ப்பனர், நாள்தோறும் திசை நோக்கி தொழும் துருக்கர், சிலுவையின் முன்னே நின்று வணங்கும் கிறித்தவர்இவர்கள் எல்லாரும் வணங்குவது ஒன்றைத்தானே! ஏன் சண்டைகள்? என்று கேட்கின்றான். கலியுகம் மதச் சண்டைகள் நிறைந்த யுகம். இந்த மதச் சண்டைகளை புரோகிதர்கள் வளர்த்தனர். "இவர் தேவர், அவர் தேவர்" என்று கடவுள் போட்டிகளை உண்டாக்கினர். இந்தப் பொல்லாத கலியுகத்தை மாற்றிச் சமயங்களைக் கடந்த பொது நெறியைக் கிருதயுக நெறியாக்குகின்றான் பாரதி.

சமயங்களைக் கடந்த சன்மார்க்க நெறிகாண வேண்டு மென்று வள்ளற் பெருமானும் வற்புறுத்தினார். பாரதி, கிருத யுகத்தில் சமயங்களைக் கடந்த பொதுமைப் பண்பிருக்கும்