பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


துடித்தாலும் இவற்றையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் பூசை மட்டும் செய்து என்ன பயன்! பாரதி, கிருதயுகக் கவிஞன். அவன் புண்ணிய மூர்த்திக்குப் புது இலக்கணம் தருகின்றான்.

"பக்கத் திருந்தவர் துன்பம்-தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி"

யோகம் என்பது மூச்சை அடக்கி வாழ்தல், மோனத்திருத்தல் என்றெல்லாம் கலியுகம் கூறியது. ஆனால், நாகரிகக் கலியுகத்தின் யோகம் பெரிய நிறுவனங்களாக வளர்ந்து விட்டன. தனி விமான தளம் அமைத்துக் கொள்ளும் அளவுக்கு யோகம் வெற்றி பெற்று விட்டது. அடேயப்பா! இந்திய நாட்டின் ஏழ்மைக்கும் வறுமைக்கும் துணை செய்ய முடியாத யோகத்திற்கு மேற்கு நாடுகளில் எவ்வளவு யோகம் என்கிறீர்கள்! ஒருபுறம் உலகத்தை வணிகச் சந்தையின் மூலம் சுரண்டியும் புதுப் புதுக் கொலைக் கருவிகளைக் கொண்டு கொலை வெறி கொண்டாடும் நாடுகளுக்கு நம்முடைய யோகிகள் மீதும் பற்று உண்டு. பற்றுக்குப் பொருள்தான் புரியவில்லை. கலியுகம் குழப்படி செய்வதிலும் விஞ்சியதுதான். பாரதி கிருதயுகத்தின் யோகம் இதுவெனக் காட்டுகின்றான். ஊருக்கு உழைத்திடல் யோகம் யாகம் என்பது என்ன? தீயை மூட்டி அதில் நெய்யை ஊற்றுவதா, என்ன? இது கலியுகத்தின் யாகம்! பாரதி, ஊரவரும் உலகத்தவரும் நலமுற்று வாழ்ந்திட உடல் வருந்த உழைத்திடுதல் யாகம் என்கிறான். ஞானம் எது? கலியுகக்காரரைக் கேளுங்கள்! படித்தவைகளையெல்லாம் 'சளசள என்று ஒப்பிப்பவர்களைப் பார்த்து ஞானி என்பர். குறுக்கே ஒரு கேள்வி கேட்டு விட்டால் அல்லது ஐய விளக்கம் கேட்டு விட்டால் இந்த 'ஞானவான்'களுக்குக் கோபம் வரும்; பொங்கி எழுவர். பிடி சாபம் என்பர்.