பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருப்பு மையமானவன். பாரதி, அவன் வாழ்ந்த காலத்திற்குக் கருத்துக்களைத் தந்தான்; எழுச்சியைத் தந்தான். பாரதி, அவன் காலத்திய மானிட சாதியை ஆவேசப்படுத்தினான். பாரதி, வரலாற்றுக் கவிஞனானான்.

பாரதி, அடிமை நாட்டில் பிறந்தான்! அரசியல் போக்கில் அடிமையாகவே வாழ்ந்தான்! ஆனால், பாரதியின் ஆன்மா விடுதலை பெற்றுப் பல ஆண்டுகள் ஆகித்தான் நாடு விடுதலை பெற்றது. தன்னளவில் விடுதலை பெறாத கவிஞன், எழுத்தாளன், பேச்சாளன், அரசியல் தலைவன் ஆகியோரால் நாடு விடுதலையும் பெறாது வளரவும் வளராது.

ஒரு நாடு திடீரென்று எதிர்பாராமல் அடிமையாகி விடுவதில்லை. அடிமைப்படுவதற்குரிய தீய இயல்புகள் தோன்றி, பல தலைமுறைகள் வளர்ந்த பிறகுதான் நாடு அடிமையாகிறது. பாரதம் அடிமைத்தனத்தை, அடிமைப் புத்தியைப் பல தலைமுறைகளாகப் படிப்படியாகப் பெற்று வளர்ந்து வந்தது, நெறிமுறை பிறழ்ந்த நிலையில்! இங்கு வளர்ச்சி, ஆக்க வழியில் அன்று; அழிவு வழியில்!

பாரத சமுதாயத்தின் வாழ்க்கையைக் கெடுத்தவை சாதி, மத உணர்ச்சிகளேயாம். பாரத சமுதாயத்தில் எண்ணத் தொலையாத சாதிகள்! இதற்குச் சாத்திரங்களின் ஆதாரம்! இந்தச் சாதிமுறைகளுக்குக் கடவுள், பாதுகாப்பாளர் என்று கூறும் அளவுக்குப் பைத்தியம் முற்றிவிட்டது. அடிமையாகப் பிறந்த பாரதி, நாட்டின் அடிமைத்தளத்திற்குக் காரணமான மூல நோயைக் கண்டு பிடிக்கிறான். நோய் முற்றிய நிலையில் தமது கவிதை வழி மருத்துவம் செய்கிறான்.

சாதிகளைப் பார்த்துப் பழகுதல் கூடாது; அன்பு காட்டுதல் கூடாது. அதுபோலவே சாதி காரணமாகப் பகை பார்ாட்டுதல் கூடாது. இது பாரதியின் முதற்பாடம். சாதிக் கொடுமைகளைவிட மதவேற்றுமை பாராட்டுதல் பெரும் தீது, சாதி வேற்றுமைகள்கூட எளிதில் நீங்கும். மத வேற்றுமைகள் எளிதில் நீங்கா ஏன்? கடவுள்கள் சண்டை