பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கின்றான்; ‘சாதிகள் இல்லை' என்றே சாதிக்கின்றான்; குலத்தில் உயர்வு, தாழ்வு கற்பித்துப் பேசுதல் பாபம் என்கின்றான்; பறையருக்கும் புலையருக்கும் விடுதலையை வழங்குகின்றான். நந்தனைப் பார்ப்பானாக்குகின்றான். சாதிகளின் பெயரால் விளங்கும் அநீதிகளைத் தகர்த்து நீதியை நிலைநாட்டுகின்றான்; தண்டச் சோறுண்ணும் பார்ப்பைச் சாடுகின்றான்; சாதி, குலம், கோத்திரம் இவற்றைக் கற்பிக்கும் சாத்திரத்தைச் சூது என்கின்றான். இது பாரதி வாழ்ந்த காலம். பாரதி குலம், கோத்திரங்களைக் கடந்த ஒரு குலம் அமைக்கின்றான். இது அவன் படைத்த சமுதாயத்தின் தொடக்கப்பணி.

இந்தியா ஒரு பெரிய நாடு. இமயம் முதல் குமரிவரை அகன்ற பெரிய நாடு, பல நூறு மொழிகள் பேசும் மக்களையுடைய நாடு. மொழி வழியிலிருந்து இனங்கள் பலப்பல உண்டு; எண்ணற்ற சமயங்கள் விளங்கும் நாடு. பாரதி, இந்தியாவில் வாழும் மக்களை இந்தியராகவே ஆக்க விரும்புகின்றான். மொழிவழி இனப்பிரிவு பாரதிக்கு உடன்பாடில்லை; சமய வழிப்பிரிவு பாரதிக்கு உடன் பாடில்லை. இதனால் பாரதிக்கு மொழிகள்மீது பற்றில்லை என்பது பொருளன்று சமயப் பற்றில்லை என்பதும் பொருளன்று. மொழியானாலும், சமயமானாலும் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்குத் துணையாக இருக்க வேண்டும். இந்திய நாட்டு மக்களை இந்தியர் என்று எண்ணும்படி செய்யத் தூண்ட வேண்டும்; இந்திய மக்களிடத்தில் இனவழிப் பற்றுகளைக் கடந்த இந்தியர் என்ற மனப்பான்மை தோன்றுதல்தான் விடுதலையார்வத்திற்கு எழுச்சியூட்டும், நாட்டின் ஆக்கத்திற்குத் துணை செய்யும். அதனால் மொழிகளை, இனங்களை, சமயங்களைக் கடந்து ‘எல்லாரும் இந்தியர்' என்று கூறி ஓரணியில் திரட்டுகின்றான். இது கவிஞனின் அபார சாதனை.