பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பாரதி குலம், மொழி, சமயம், இன வேற்றுமைகளிலிருந்து மீட்டுக்கொள்ள வந்த பாரத சமுதாயத்தை 'விலை'யுடையதாக்க முயலுகின்றான். இங்கு விலை என்பது பொருளாதார சமத்துவத்தைக் குறிப்பது, பாரதி வாழ்ந்த காலத்தில் இந்திய நாட்டில் நிலப்பிரபுத்துவம் கொழுத்து வளர்ந்திருந்தது. வளர்ச்சியடையாத முதலாளித்துவமும் இருந்தது. இந்திய நாட்டு மக்களில் பெரும்பாலோர் உழைப்பாளிகள், சிலரே வளமான வாழ்க்கையுடையவர்கள். இந்திய செல்வம் உழைப்பாளிகளால் உருவாக்கப்பட்டாலும் அவர்களுக்கு சொந்தமாக இல்லை. இந்திய உழைப்பாளிகளால் படைக்கப்பட்ட செல்வம், அவர்களைத் தெரு வோரத்தில் நிறுத்திவிட்டு மாடமாளிகை, கூட கோபுரத்துக்குள் சிறைப்பட்டுவிட்டது. இந்தக் கொள்கைக்கு ஒருபுறம் மதப் புரோகிதர்கள் காவல், இன்னொருபுறம் பேயரசு காவல், இந்தியர்களுக்கோ "கோடீசுவரர்", “இலட்சாதிபதி” என்றெல்லாம் விலை வந்து விட்டது. ஒருபுறம் உழைப்பை விலைக்கு விற்கும்-ரூபாய் இரண்டுக்கும் மூன்றுக்குமாக விலைக்கு விற்கும் ஏழைத் தொழிலாளிகள்விவசாயிகள். இன்னொருபுறம் மலிவான முறையில் உழைப்பை விலைக்கு வாங்கி அடுக்கிய செல்வத்தைச் சேர்ந்தவர்களுக்குரிய விலைப்புள்ளி இலட்சம்; கோடி இந்த வித்தியாசத்தைப் பாரதி மறுக்கின்றான். சோஷலிசப் புரட்சிக்கு வித்திடுகின்றான். எல்லாருக்கும் ஒரே விலை என்ற கொள்கையை முன் வைக்கின்றான். மொழியால், இனத்தால், குலத்தால் உயர்வு தாழ்வு இல்லையானாலும் பணத்தால் உள்ள ஏற்றத் தாழ்வு எளிதில் போகாது. கொழுத்த பணம் இருப்பதனாலேயே பள்ளிக்கூடத்தின் நிழலில் ஒதுங்காதவன் படித்தவனாகிவிடுவான். ஏமாந்து போன சமுதாயம், தான் ஏமாந்த நேரத்தில் ஏற்றம் பெற்றோரின் வார்த்தைகளையே கேட்டு வாழ நேரிடும்.