பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

73


அதனால் மனித நாகரிகம் நச்சுத் தன்மை அடைந்து விடும். பொருளாதார சமத்துவம் இல்லாத நாட்டில் அறம் வளராது; அன்பு வளராது. அதனால் பாரதி, இந்தியர் அனைவரையும் ஒரே விலை மதிப்புடையவராக ஆக்க முயல்கின்றான். இது கவிஞனின் எதிர்பார்ப்பு. ஆனால், நடக்கத்தான் இல்லை.

இந்தியர்களில் சரி பாதிப் பேர்களுக்கு மேல் வறுமைக் கோட்டுக்குள் வீழ்ந்து கிடக்கின்றனர். இரண்டு கைவிரல்களின் எண்ணிக்கையுடையோரிடத்தில் இந்தியச் செல்வம் குவிந்து கிடக்கிறது. இன்று கடவுள், கல்வி, வாக்கு, நீதி அனைத்தையும் விலைக்கு வாங்கும் அளவுக்குச் செல்வம் ஒரு புறத்தில் குவிகிறது. இன்னொரு புறத்தில் விலையற்ற மனிதர்கள் உடல் உழைப்பையும் அதுவும் விலை போகாத நேரத்தில் உயிரையும் விலை பேசி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பாரதியின் எல்லாரும் ஓர் விலை என்ற இலட்சியம் நிறைவேறினால்தான் இந்திய விடுதலை முழுமை பெறும்.

கடைசியாக பாரதி 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்று முடிக்கின்றான். பாரதிக்கு 'மன்னர்' என்ற சொல் மீதோ, மன்னராட்சி மீதோ காதல் இல்லை. 'குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு' என்று விரும்பிய பாரதி, எப்படி மன்னரை விரும்புவான்; அது மக்களுக்குத் தீராத் துன்பங்கள்! எல்லாரும் மன்னராகிவிட்டால் என்ன ஆவது? பாரதியின் இந்நாட்டு மன்னர் என்ற வரிக்குச் சரித்திர கால மன்னர்களை நினைத்துக் கொண்டு அர்த்தம் செய்துவிடக் கூடாது. பாரதி வாழ்ந்த காலம் எல்லா அதிகாரங்களும் மன்னரிடத்தில் இருந்த காலம். சாதாரண மக்களுக்கு மன்னர்தான் அறிமுகம்! சாதாரண மக்களுக்குத் தெரிந்தது மன்னரின் அதிகாரம்தான். ஆதலால் மக்களுக்கே எல்லா அதிகாரமும் என்ற கொள்கையை வேறுவார்த்தையில் பாரதி சொல்கின்றான். ஆனால், பாரதியின் மன்னர்கள் நாட்டின்