பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

75


இல்லை. இவற்றிற்கு மேலும் வாழ்க்கைக்குக் குறிக்கோள்கள் உள்ளன. குறிக்கோளுடைய வாழ்க்கை சிறப்புடையது. ஆனால், இன்னல்கள் நிறைந்ததாகத்தான் இருக்கும். உயர் குறிக்கோளும் ஆர்வமும் ஆளுமையும் உடைய வாழ்க்கையை விரும்பி மேற்கொள்பவர்கள் இன்பத்தை விரும்பமாட்டார்கள். இடும்பை.துன்பம் இயல்பென்பர் சிலர். இத்தகையோரைத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் துன்புறுவதில்லை. உலைக்கள்த்தில் அடிபடும் இரும்பு, எஃகாதல் போல, உயர் குறிக்கோளுடையார், துன்பம் சுடச்சுட உரம் பெறுவர். அவர்கள் நலிவதில்லை. அரைக்கீரை கிள்ளக் கிள்ள வளரும். அதுபோல் குறிக்கோளும் அதனை அடையும் ஆர்வமும் திறனும் உடையவர்களைத் துன்பம் துவளச் செய்யாது. மாறாக வளர்க்கும்.

இடர்களுக்கு அஞ்சாது நாட்டுப் பணியில் ஈடுபட வேண்டும். எந்தக் காலத்திலும் உண்மைக்கு உழைக்கும் பணி, பொதுப்பணி இன்பமாய் இருந்ததாக வரலாறு இல்லை. சமுதாயத்தில் களைகளே கழனியின் பயிர்களைச் சாப்பிட்ட வரலாறு தான் மிகுதி. அறிவால் சிந்தனை செய்! அறிவாளியாக இரு என்ற கிரேக்கச் சிந்தனையாளனை அன்றைய முட்டாள் உலகம் நஞ்சு கொடுத்துக் கொன்றது. உலகம் உருண்டை என்று உண்மை சொன்ன கலிலியோ பெற்ற பரிசு என்ன? ஏசுவிற்குத்தான் இந்த உலகம் எதைப் பரிசாகத் தந்தது? அப்பரடிகள் வாழ்க்கையிலும் சோதனைகள் தானே மிகுதி. இதுதான் வரலாறு. ஆதலால் இடுக்கண்களுக்கு அஞ்சாமல் பணி செய்யவேண்டும்.

இந்தியாவின் விடுதலைப்போர் இடுக்கண் நிறைந்தது என்று பாரதி உணர்கிறான்; உணர்த்துகிறான். அடுத்து பாரதி நயம்பட ஓர் உண்மையைச் சொல்கிறான்; "ஏழையராகி இனி மண்ணில் துஞ்சோம்” என்று. என்ன பொருள்? ஏழையர் இயற்கையில் ஏழையரல்லர். மற்றவர்கள் யாரும் ஏழைய