பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ராக்கவுமில்லை. பாரதநாடு ஏழை நாடா? இல்லைஇல்லவே இல்லை. ஆனால், ஏழையர் நாடாக இருக்கிறது. "கணக்கின்றித் தரும் நாடு" என்று கூறுகிறான். "கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும்” என்றும் பாடுகின்றான். அப்படியானால் ஏன் ஏழையராகின்றனர். பாரதியே விடையும் கூறுகின்றான். கையை விரித்து இல்லை என்று கூறும் வாழ்க்கை கேவலமானது. பரிதாபத்திற்குரியது. இல்லை என்று அயர்ந்து உறங்குவானை நிலமகள் கேலி செய்கிறாள். ஏன்? நிலமகள் தன் மடியில் ஆயிரமாயிரம் பொருள்களை வைத்திருக்கிறாள்; இனிய சுவை நல்கும் கரும்பு வைத்திருக்கிறாள்; வாழ்விக்கும் வாழை வைத்திருக்கிறாள். இவற்றை எடுத்து அனுபவிக்கும் ஆள்வினை வேண்டும். இரந்து கேட்கும் விரித்த கையை மடக்கி உழைத்திடும் கரங்களாக்கினால் என்ன கிடைக்காது? எல்லாம் கிடைக்கும். இதற்கு மனம் இல்லாமல் ஏழையராகி-ஏங்கித் தவிக்கும் மனப்போக்கை மறுக்கிறார். தூங்காதே! உழைக்கும் நேரத்தில் உறங்காதே! உழைக்கும் நேரத்தில் உறங்கினால் ஏழையராதல் இயற்கை-தவிர்க்க முடியாத இயற்கை நியதி: ஆதலால் உழைத்து வாழவேண்டும்.

உழைத்தால் மட்டும் போதுமா? போதாது. படைப்புப் பல படைத்தாலும் பலரோடு உண்ணும் அறிவு தேவை உணர்வு தேவை; தொழில் செய்தல் இயற்கை மனிதனின் கடமை. ஒருவர் செய்யும் தொழிலே கூட தொண்டாகவும் விளங்கும் தன்மை உடையதாக அமையும். தொண்டாக மற்றவர் நலனுக்கு உதவியாக இருப்பது தொழிலாயினும், அத் தொழில்வழி வருவாய் பெற்றாலும் கூட தொழில் உயர்வான தொழிலே! பாராட்டுதலுக்குரிய தொழிலே; ஆயினும், தொழிலில் சில இழி தொழிலாகக் கருதப்பெறுகின்றன. தொழிலில் ஏது இழிவு! உயர்வு? ஆம்! தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை. இது உறுதி பாரதியே விஞ்ஞானியாகத் தொழில் புரிதலையும் சந்தி பெருக்கும் தொழில் புரிதலையும் சமநிலையினதாகப் பாடியுள்ளான்.