பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

83



இன்று, இந்தியா அடிமையாவதற்கு முன் இருந்த நிலையை அவாவி நிற்கிறது. அடிமை நிலையை எய்துதற்குரிய குணக்கேடுகளை முயன்று அடையத் துடிக்கிறது. சுதந்திரம் என்பது கேலிக்கூத்தாகி வருகிறது. மனம் போன போக்கில் அவரவர் விருப்பப்படி நடப்பது சுதந்திரம் என்று கற்பித்துக் கொண்டுள்ளனர். சக்தி படைத்தவர்கள் கிடைத்ததைச் சுருட்டுகிறார்கள். சாதிமதச் சண்டைகள் தலைகாட்டுகின்றன. இந்தப் போக்கு நாட்டுக்கு நல்லதல்ல. நமக்கும் நல்லதல்ல என்ற சிந்தனைத் தெளிவு நமக்குத் தேவை.

"முப்பது கோடியும் வாழ்வோம்-விழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்"

என்ற தெளிவான முடிவில் நாம் உறுதியாக நிற்க வேண்டும். அங்ஙனம் நின்றால் எத்துன்பத்தையும் எதிர்த்து வெற்றி பெறலாம். இது பாரதியின் ஆணை!

அச்சம் தவிர்!

மனித குலத்தில் அரசு-ஆட்சி முறை தொடங்கிய காலத்திலிருந்தே அரசுக்குப் பயப்படுகிற உணர்வும் ஒருசேர வளர்ந்து வந்துள்ளது. ஏன்? ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்களில் நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது பேர்கள் ஏதோ ஒரு பெயரில் மக்களை அடக்கியே ஆண்டனர்; தம் வழி வராதாரைத் துன்புறுத்தினர். அதிகாரத்தில் உள்ளவர்கள் நேரிடையாகச் செய்யாது போனாலும், ஆட்சியாளர்களைச் சார்ந்தவர்கள்கூடத் தொல்லை கொடுப்பர்.

இப்போது நடப்பது மக்கள் ஆட்சி. ஆளுங் கட்சியினைச் சார்ந்தவர்கள், "ஆட்சி, மக்களாட்சி” என்று உணர்வதில்லை. தங்கள் கட்சியே ஆள்கிறது-தாங்கள் நினைத்தவெல்லாம் நடக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.