பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

87


"கஞ்சி குடிப்பதற் கில்லார்-அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமில்லார்”

என்று பேசுவான் பாரதி.

அச்சம், வறுமை ஆகியன தனித்து நிற்பன அல்ல, இவைகளுக்கு நெருக்கமானதாக அமைந்து திரும்ப எழுந்திருக்கவிடாமல் படுக்க வைத்து வெற்றி காண்பது நோய். நோய் வந்துற்றால் ஐயோ பாவம்; பார்க்காத சோதிடம் இல்லை; கும்பிடாத கடவுள் இல்லை; நேர்த்திக் கடன் செலுத்தாத தெய்வங்கள் பாக்கியில்லை. சுயமாகச் சிந்திக்க மாட்டார்கள். யார் யார் எதைச் சொன்னாலும் அதைச் செய்து திரும்பத் திரும்பத் துன்பப் படுகுழியில் வீழ்வர். ஏன் இந்த அவலம்? அஞ்சி வாழ்வதற்குப் பதில் ஆண்டுகள் சிலவே வாழ்ந்தாலும் அச்சமின்றி உழைத்து உண்டு புகழுடன் வாழ்வதே பாரதி காட்டும் வாழ்க்கை.


இனி ஒரு விதி செய்வோம்!

ஒரு நாடு என்றால் அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துணர்ந்து சமநிலையில் வாழ்வதேயாம். பாரதி வாழ்ந்த காலத்தில் இந்திய நாட்டின் மக்கள் தொகை முப்பது கோடி தான். இன்றோ அறுபத்து நான்கு கோடியைத் தாண்டி விட்டது. பாரதி இந்திய சமுதாயத்தை ஒரே சமுதாயமாக காண்கிறான். நாட்டின் உடைமைகள் அனைத்தும்அனைத்து மக்களுக்கும் பொதுவுடைமை என்று பாடுகின்றான். பாரதிக்கு முன் தமிழில் "பொதுவுடைமை" என்கிற சொல் இல்லை. தமிழுக்கு இந்தச் சொல்லை வழங்கியவனே பாரதிதான்.

"வல்லமை உடையது வாழும்; வலிமையற்றது அழியும்." இதுவே உயிரியல் வாழ்க்கை நியதி. வல்லமை யுடையவர்கள் வல்லமையற்றவர்களை அடக்கியும், அழித்தும் தங்கள் வாழ்க்கை மாளிகையைக் கட்டி வருகின்றனர். ஒரு