பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
96
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

உண்பது அவசியம். உடம்பை அழித்திடும் தவம் கொடியது. அவ்வழி உயிரும் அழியும். அதனாலன்றோ திருமூலர்,

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே,

என்றார். இங்கு, வளர்த்தல் என்பது ஊன் பொதி தசைகளை வளர்த்தலன்று. பயன்படு தகுதியும் திறனும் வளர்த்தலே, வளர்த்தல் என்பதற்குக் கொள்ள வேண்டிய பொருள்.

ஆதலால், ஞானம் வேண்டுமா? உயிரைச் சார்ந்துள்ள அறியாமையை அகற்றுங்கள்; உடலை வருத்திப் பயனில்லை; உடல் வாடுவதால் உயர் ஞானம் கிட்டாது; வீடும் கிடைக்காது. இதுவே நமது சமயநெறி; திருஞானசம்பந்தர் காட்டிய நன்னெறி,

வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால்
வாடின் ஞானம் என்னாவது?

என்று கேட்கிறார். இந்த வினாவினால் கிடைக்கும் விடை, விரதங்களால் உயிரின் ஞான முயற்சியும் கெடும். மண்ணைக் கெடுத்து மனை கட்ட முடியுமா? கண்ணைக் கெடுத்துக் காவியம் படைக்க முடியுமா?

ஞானம் பெறுவதற்குக் கருவிகளாக, மிகச் சிறந்த நுட்ப முறையில் வழங்கிய அறிவுக் கருவிகளும், செய்கருவிகளும் செப்பமாக அமைந்தது உடம்பு. புலன்கள் அறிவுக்கருவிகள்; பொறிகள் செய்கருவிகள். அறிதலும் செய்தலும்கூட அறியாமை அகலவும் அறிவினைப் பெறவுமேயாம். அவை நிகழும்போது களைப்புத் தோன்றாமல் இருக்கச் சில இன்ப அனுபவங்களும் உடன் நிகழ்வாக நிகழ்கின்றன. உடலினைக் கொண்டு வாழும் போதெல்லாம், செய்கருவிகளாகிய பொறிகள் வாயிலாகவும் அறிகருவிகளாகிய புலன்கள் மூலமாகவும் நல்லறிவைச் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவு வளரும்; வளர்ந்து