பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீடு பெறும் வழி

97


பேரறிவாக மலரும்; ஞானம் என்று பெயர் பெறும். இக்கருவிகள் அழிந்துபடின் எங்ஙனம் ஞானம் கிடைக்கும்? தூர்ந்த வாரியின் வாயிலாகக் கழனிக்கு நீர் கிடைக்குமா? ஞானமே கிடைக்காதபோது ஞானத்தின் பயனாகிய வீடும் கிடைக்காது. அப்படியானால், திருஞானசம்பந்தர் ஞானம் பெறக் காட்டும் வழி என்ன?

திருஞானசம்பந்தர், ஞானம்பெற - வீடுபெறக் காட்டும் வழி மிக எளிய வழி. நீரில் பலகால் மூழ்க வேண்டாம்; நெருப்பிடை நிற்க வேண்டாம்; காற்றையே குடித்து வாழ வேண்டாம்; காதல் மனை வாழ்க்கையைத் துறக்க வேண்டாம்; செந்தமிழ்க் கலை தேர்ந்து கற்றிடல் வேண்டாம், இசை வேண்டாம். அது மிக எளிய வழி. அது என்ன? திருவலஞ்சுழியில் எழுந்தருளியுள்ள இறைவனைத் திருஞானசம்பந்தர் பாடிய திருப்பாடல்களைப்பாடும் ஞானம் பெற்றிருக்கின்றவர் அடி சேர்ந்து, அவர்களைப் பாராட்டி, அவர் வழி நின்று ஒழுகுதல் மூலம் ஞானம் பெறலாம்; அவ்வழி வீடும் பெறலாம். மீண்டும் பாடலைப் படித்துச் சிந்தனை செய்து செயற்படுவோமாக.

வீடும் ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
வாடின் ஞானம் என்னாவது? எந்தை வலஞ்சுழி
நாடி ஞான சம்பந்தன் செந்தமிழ் கொண்டிசை
பாடு ஞானம் வல்லாரடி சேர்வது ஞானமே.

- திருஞானசம்பந்தர்

கு.இ.VII.7.