பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


னிடையே இசைவு உண்டாக்குதல் சமயநெறியின் அடுத்த இலட்சியம்.

உயிர் நுண் பொருள்; அறிவுப் பொருள் ஆயினும் உயிரின் அறிவு இயல்பில் குறையுடையது. ஆனாலும் நிறை அறிவைப் பெறத் தகுதியுடையது. கடவுள் நுண் பொருளானாலும் பேரறிவுப் பெரும் பொருள். உயிரின் குறையறிவை நிறை அறிவாக்குவது இறையின் பேரறிவே. இறையின் பேரறிவை, உயிர் பெறுதற்குரிய அறிவுச் செயல்முறையே வழிபாடு.

வழிபாடு ஒரு சடங்கல்ல. அஃது ஓர் உயிரியல் செய்யும்முறை. இறையின் பேரறிவை நினைந்து அதனோடு ஒன்றாகிக் கலந்து அதன் பேரறிவைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்டு உயிர் வளர்ந்து வாழுதலே வழிபாட்டின் பயன். உலகியல் விஞ்ஞானச் செயல் முறையினும் இந்தச் செயல்முறை அருமையானது; எளிதில் கைவரத் தக்கதன்று. இன்று பலர் வழிபடுகின்றனர். ஆனால், வல்லாங்கு வழிபடுபவர் எத்துணை பேர்? இல்லை என்றே கூறினும் மிகையன்று.

“நட்டகல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்?” என்றார் ஒரு சித்தர். என்ன பொருள்? நட்ட கல்லைச் சமய மெய்யுணர்வு வழிபாட்டு முறையில் கடவுளாக்க வேண்டும். இன்றும் பலர் பிறப்பின் வழி திருக்கோயில்களில் பூசனை உரிமை பெறுகின்றனர். அவர்களுக்குப் பயிற்சி இல்லை. இறை வழிபாடு - அதிலும் குறிப்பாகத் திருக்கோயில் வழிபாடு பயின்று செய்ய வேண்டிய ஒன்று. அஃது ஓர் அருள் நுட்பக்கலை! முயன்றால் எளிதில் கைகூடும். ஆனாலும் அருமையானது.

பூசனையில் இடையீடின்றி நினைத்தலாகிய தியானம் இன்றைக்குப் பலருக்குக் கைகூடுவதில்லை. அறுபட்ட கயிற்றைப்போல அறுந்த சிந்தனையே இன்று பலருக்கு!