பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பரவும் முறையைப் பயில்க!

103


நெஞ்சத்தால் இறைவன் திருநாமங்களை எண்ணுவோர் இல்லை. அகப் பூசனை செய்வோர் இன்று யார்? இதயக் கமலம் எத்துணை பேருக்குத் தெரியும்? உள்ளக் கிழியில் உருவெழுதும் உயர்கலை தெரிய வேண்டாமா? உள்ளக் கிழியில் எழுதிய உருவைப் புறத்தே கல்லில் - செம்பில் எழுந்தருளச் செய்விக்கும் திறன் பெற்றார் யார்? வழிபாட்டுக்கு இன்று பயிற்சி தருவாரில்லை. பயிற்சிபெற வேண்டுமென்ற உணர்வே கூட இன்று மறைந்து விட்டது.

திருஞானசம்பந்தரே வழிபாட்டு முறைகளைத் தாம் பயின்றதாகக் குறிப்பிடுகின்றார். ஆனால், நம்மனோர்க்கு வழிபாட்டு முறைகளைப் பயிலும் ஆர்வமில்லை; அஃது ஓர் இறை இயல் அறிவு என்ற நம்பிக்கைகூட இல்லை. ஆதலால், நாள்தோறும் இறைவனை வழிபட வேண்டும். வழிபட வேண்டிய முறையைப் பயின்று அறிந்து கொள்ளுதல் வேண்டும். அப்பொழுதே திருவருளின்பம் கிடைக்கும். இதனைத் திருஞானசம்பந்தர்,

மரவம் பொழில்சூழ் கடவூர்
மண்ணுமயான மமர்ந்த
அரவமசைத்த பெருமா
னகலமறிய லாகாப்
பரவுமுறையே பயிலும்
பந்தன்செஞ்சொன் மாலை
இரவும்பகலும் பரவி
நினைவார்வினைக ளிலரே,

என்று பாடுகின்றார்.