பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர்

105



மனிதன் அரசுக்கு அடிமையல்ல. மனிதனின் உரிமைகளைப் பாதுகாக்கவே அரசு. அதிலும் சமயம், தனி மனிதனின் விருப்பார்வத்தைப் பொறுத்தது. இதில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அப்பரடிகள் ஏழாம் நூற்றாண்டிலேயே உரிமை முழக்கம் செய்து வெற்றியும் பெற்றவர்.

அப்பரடிகள் சாதிகளை எதிர்த்தவர்; தீண்டாமையை எதிர்த்தவர்; மூடத்தனமான சடங்குகளை எதிர்த்தவர்; பல்வேறு சமயத் துறைகளிடையே இணைப்பைக் கண்டவர்; மதப் புரோகிதர்கள் வழி வேற்றுமைகள் உருவாதலைத் தவிர்த்தவர்; ஒருமை நிலையை உண்டாக்கியவர்; நாடு முழுவதும் நடையாக நடந்து நாளும் நன்மையளிக்கும் அருள்நெறிக் கொள்கைகளைப் பரப்பி வந்த பெருந்தகையாளர்.

திருநெறிய தமிழ் நெறிக்கும் புத்துயிர் அறித்த அண்ணல், அப்பரடிகள். திருஞானசம்பந்தருடன் சேர்ந்து நின்று அசைவன, அசையாதன அனைத்திலும் சமயம் பெருக்கிய உத்தமர். தமிழ் நாட்டின் திருத்தொண்டு வளர்வதற்காக அவதரித்தருளிய தமிழாளியர். பன்னிரு திருமுறைகளில் 4, 5, 6ஆம் திருமுறைளை அருளிச் செய்தவர். அப்பரடிகளின் திருமுறைகளை ஓதுவோர் திருநின்ற செம்மையே செம்மை நலம் எய்துவர். இஃது உண்மை; உறுதி.

அப்பரடிகள் திருநெறிய தமிழ்க் கவிதை யுலகிற்குத் தாண்டகம் என்ற புதுவகை யாப்பை வழங்கி யருளியுள்ளவர். இதனால் “தாண்டக வேந்தர்” என்று சிறப்பித்துப் பேசப்படுகிறவர். திருஞானசம்பந்தரால் ‘அப்பர்’ என்று அழைத்துச் சிறப்பிக்கப் பெற்றவர். அந்தணரில் சிறந்த அப்பூதியடிகள் அப்பரடிகளின் திருவடிப் போதுகளைப் பற்றிக்கொண்டு உய்திபெற்றவர்.