பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர்

113


லிருந்து சைவத்திற்கு மீள வந்தபொழுது சமணப் புள்ளிகள் ஆவேசப்படுகின்றன; அரசாணையை ஏவுகின்றன.

அகிம்சையைப் போதிக்கும் சமண சமயம், திருநாவுக்கரசருக்குச் சொல்லொணாத - எழுதிக்காட்ட இயலாத கொடிய துன்பங்களை விளைவித்தது. களிற்றுக் காலால் இடறவைத்தது; நச்சுச் சோறு ஊட்டியது; நீற்றறையில் இட்டது; கல்லில் கட்டிக் கடலில் எறிந்தது. சிவனருளைத் துணையாகக் கொண்டு திருநாவுக்கரசர் இந்த இடர்களையெல்லாம் கடந்தார்; சமண சமய வன்முறைகளை வென்று விளங்கினார். ஒருவர் சமண சமயத்திலிருந்து மீண்டும் சைவத்திற்கு வந்ததில் எத்தனை எத்தனை அங்கலாய்ப்புகள்? கொடுமைகள்?

அந்நிலையிலும் கூடச் சைவ உலகம் அப்பரடிகளுக்குத் துணை நின்றதாகவும் தெரியவில்லை. ஏன்? இல்லை என்றே சொல்லலாம். மனிதரைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் நாம்! நமது சமயத் தலைவர்கள் கடவுளைப் பற்றியே அதிகம் எண்ணிக் கவலைப்படுகிறார்கள்! ஐயோ, பாவம்! வரலாறு தெரியாதவர்கள், வாழும் முறைமை தெரியாதவர்கள்!

திருநாவுக்கரசர் பொய் கடிந்தார்; பொறிகளின் மீது தனியரசாணை செலுத்தினார். பொறிகளுக்கும் புலன்களுக்கும் தோல்வியைத் தந்தார்; மெய்ந்நெறியே மேவி நின்றார்; திருவினைகளைக் கடந்து நின்றார்; திருந்தி சாத்வீக குணத்தைப் பெற்று வெற்றி கொண்டார். அன்பு நெறியிலேயே நின்றார்.

திருநாவுக்கரசர் அருளிய திருமுறைகள் ஓதத்தக்கன உணரத்தக்கன. திருநாவுக்கரசருடைய திருப்பாடல்கள் சமுதாய நலம் சார்ந்தன; சமுதாயத்தை நெறிப்படுத்தி நடத்தும் இயல்பின. திருநாவுக்கரசர் வழியில் நடைபோடில் சமுதாயம் வளரும்; வாழும்.


கு.இ.VII.8.