பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர்
115
 

கரசர், “உள்ளக் கோயிலில் பெருமான் எழுந்தருளியுள்ளமையைப் பலர் அறிந்து கொள்வதில்லை. உள்ளத்தில் இறைவன் உள்ளான் என்பதை அறிந்து உணராதவர்கள் இறைவனை அடைவது அரிது” என்கிறார்.

ஆம்! மக்கள் இருட்டறையில் கரிய மலட்டுப் பசுவிடம் பால் கறந்ததைப் போலத்தான் வாழ்கின்றனர். “உள்ளத்துணர்மின்”, உள்ளமே கோயில் என்று மேலும் அருளியமையையும் அறிக! “துறந்தவர் உள்ளக் கமலம் மேவும் சோதித் திருவுரு போற்றி” என்று காஞ்சிபுராணம் போற்றும்; சேக்கிழார் பெருமானும் ஆன்மாவிற்கு, தன்னை அறியும் போதுதான் தன்னுடைய அறியாமையும் இயலாமையும் அறியவரும் என்றார்.

இந்தச் சூழ்நிலையில் கண்ணொளி இழந்தாருக்குக் கோல் ஒன்று தேவைபோல, ஆன்மா, இருளிலிருந்து ஒளியை நோக்கியும், கருவூரிலிருந்து திருவூரை நோக்கியும் நடத்த இருக்கும் பயணத்திற்குத் தனித்துணை தேவை. ஒளி தேவை; பேரொளி தேவை! வழித்துணை தேவை, மருந்து தேவை என்ற உணர்வு மேலிடும் போது தான் தெய்வம் உண்டெனும் சித்தம் உண்டாகி இறைவனைத் தேடும் ஆர்வம் தலைப்படும்.

மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி இட்டுச்
செம்மையுள் நிற்ப ராகில்
சிவகதி விளையு மன்றே,

(4–76:2)

என்ற திருப்பாடலில் ‘தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலியிட்டு’ என்ற அடி கவனத்திற்குரியது. சிவ போதத்தால் ஆன்ம தரிசனம்; சிவ தரிசனத்தால் ஆன்ம