பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வரையில் போய்விட்டது! இது இரங்கத்தக்க நிலை! அப்பரடிகள், உலகியல் சார்பு எதுவும் இல்லாதவர்; சிவன்தன் திருவடிகளே பற்றெனக் கொண்டு வாழ்ந்தவர். அவர்தம் படைக்கலம் ஐந்தெழுத்துதான்; இதனை,

படைக்கல மாக உன் நாமத் தெழுத்தஞ் சென் நாவிற் கொண்டேன்,
இடைக்கலம் அல்லேன் எழுபிறப் பும் உனக் காட் செய்கின்றேன்;
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித்துர நீறணிந்துன்
அடைக்கலம் கண்டாய் அணிதில்லைச் சிற்றம் பலத்தானே!

(4.81.8)


என்ற பாடலால் அறியலாம்.

“இடைக்கலம் அல்லேன்! எழுபிறப்பும் உனக்கு ஆட் செய்கின்றேன்” என்ற சொற்றொடரால் பத்திமையில் உள்ள உறுதிப்பாடு விளங்குகிறது. அப்பரடிகள் சிவன் எம்பிரானுக்கு இராப்பகல் என்ற வேற்றுமை யின்றித் தொண்டு செய்தவர்.

சிவனை, தம் தலைவனை நினைத்தொறும் நினைத்தொறும் அகங்குழைந்து மெய்வருந்தி அழுதவர். அதனாலேயே அவர் கண்கள், “மழைவாரும் இணை விழி” என்று மாதவச் சிவஞான முனிவர் போற்றினார்.

தொழு தெழுந்து ஆடிப்பாடித்
தோத்திரம் பலவும் சொல்வி
அழுமவர்க்கு அன்பர் போலும்
ஆவடு துறையனாரே!

(4.56.4)

என்ற அருள்வாக்கு உபதேசம் அல்ல. அது, அவர் வாழ்ந்த முறை; நம்மனோர் பின்பற்ற வேண்டிய முறை. அப்பரடிகளின் அடிச்சுவட்டில் பக்தியும் தொண்டும் வளர்ந்தால்