பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
126
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

என்பான். சமுதாய ஒருமை, சமுதாய நலன் ஆகியவற்றிற்கு விரோதமாகவும் தன்னயப்புக்களின் தூண்டுதலாலும் சாத்திர விதிகள் செய்வது உண்டு. இங்ஙனம் செய்யப்பெற்ற சாத்திரங்களில் “தீண்டாமை” என்பதும் ஒன்று.

அப்பரடிகள் காலத்தில் மனிதம் போற்றும் அடிப்படை கொள்கைக்கு மாறாகச் சாதி வேற்றுமைகள் குறிப்பாகத் தீண்டாமை முதலிய தீமைகள் நிலவின. இவற்றை அப்பரடிகள் கடுமையாகச் சாடினார். அப்பரடிகளைத் தீண்டாமை எதிர்ப்புக் கொள்கையிலிருந்து மாற்றப் பல முயற்சிகளைச் சாதிப் பித்தர்கள் மேற்கொண்டனர்.

நிதியளிப்புகள், நிலக்கொடைகள், அதிகாரம் உள்ள பதவிகள் ஆகியனவெல்லாம் வழங்க முன்வந்தனர். அப்பரடிகள் எதையும் வாங்கக்கூடத் தயாராக இல்லை. தீண்டாமை விலக்குக் கொள்கைகளை விட்டுவிடவும் அவருக்கு விழைவும் இல்லை. விருப்பமும் இல்லை.

அதன்பின் ஆசாரம் முதலியனவற்றைக் காரணமாகக் காட்டித் தீண்டாமையை நிலைநிறுத்த முயல்கின்றனர். ஆயினும் அப்பரடிகள் இவற்றுக்கெல்லாம் சற்றும் இடத்தராமல் மறுக்கிறார். இதனை,

சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தகுவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்மெல்லாம் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே!

(6–95. 10)

என்ற பாடல் நமக்குத் தெரிவிக்கிறது.