பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர்

129


தீண்டாமை விலக்குப் பணி, சாதி - சமூகத்தின் பெயரால் இட ஒதுக்கீடும் சலுகைகளும் அல்ல.

இதனால் சலுகைகளைக் காப்பாற்றும் பொருட்டுத் தீண்டாமை, தீண்டாமை வழிபட்ட சாதி உணர்வு இறுக்கமாகிறது. சாதிகளைக் காப்பாற்றினால்தான் சலுகைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை வளர்கிறது.

இதனால் எங்கும் சாதிக் கலவரங்கள் தோன்றுகின்றன. இதற்கு மாறாகப் பின்தங்கிய நிலைக்குரிய அளவைகள் இன்னன்ன என்று ஆய்வுசெய்து தெளிந்து அந்த அடிப்படையில் மனிதகுலத்தை வரிசைப்படுத்தி அவரவர் உயர்வுக்குரிய உதவிகளைத் திட்டமிட்டுக் காலக் கெடுவுடன் வழங்கி உயர்த்தலாம்.

இதனால் கி.பி. 2001ஆம் ஆண்டிலாவது நம்முடைய நாட்டில் ஒரே குலம் தோன்றும், சமுதாயம் உருக்கொள்ளும். அந்தப் பொற்காலம் வருமா?

அப்பரடிகள் நம்முடைய சமுதாயத்திற்குப் பொருளியல் கோட்பாட்டையும் வகுத்தருளினார். அவர்தம் பொருளியல் கோட்பாடு அறநிலை தழீஇயது. அதாவது “தர்மகர்த்தா முறை”. இந்த முறையைக் காந்தியடிகள் விரும்பினார்.

இன்று இந்தக் கோட்பாடுகளை ஏற்றுப் போற்றப் பெறாமல் இருப்பது தவக்குறைவேயாம். அதுவும் நமது சமய நிறுவனங்கள் இந்தக் கோட்பாட்டைச் செயற்படுத்தாமையை வரலாறு மன்னிக்காது.

இன்று நமது சமயம் சடங்குகளிலேயே வளர்கிறது; வாழ்கிறது. அதனால் ஆன்ம வளர்ச்சி இல்லை; அனுபவம் இல்லை. சடங்குகளை அப்பரடிகள் உடன்படா நிலையில் மறுக்கிறார். அவர் போற்றியது பக்தியும் தொண்டுமேயாம்.


கு.இ.VII.9.