பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர்
131
 


வறுமைக்கு மாற்று செல்வமே! செல்வம் மனிதனை வறுமைத்துன்பத்திலிருந்து காப்பாற்றும். விரைந்தாளும் வறுமை வந்தடைந்தபோது உள்ள விரைவு, செல்வம் தேடுவதில், செல்வத்தினைச் சேர்ப்பதில் மனிதன் காட்டுவதில்லை. இதுதான் விநோதம்!

சினம் கொடுமையுள் கொடுமை. சினம் தன்னைச் சேர்ந்தாரைக் கொல்லும். வறுமைக்கும் கோபத்திற்கும் உறவு உண்டு. கோபம், அனைத்துத் துன்பங்களுக்கும் தாய்! இந்த உலகில் உள்ள தொல்லைகளைக் கூர்ந்து நோக்கின் அவையனைத்துக்கும் கோபமே காரணம் என்பதை அறியலாம்.

“கோபத்தை அடக்குபவனே பாக்கியசாலி” என்றார் முகம்மது நபி. கோபம் பைத்தியத்துக்குச் சமம். அதனால் அப்பரடிகள் “பொல்லா வெகுட்சி” என்றார்.

இவைபோலவே, மகிழ்ச்சியும் துன்பத்தைச் செய்யக் கூடியதே! மகிழ்தலோடு நிற்பார் யார்? மகிழ்ச்சியாலும் மதிமயங்கித் தீமை செய்தல் உண்டு. மகிழ்ச்சியை நாடித் தகாதன செய்தலும் உண்டு.

அடுத்து வெறுப்பு. வெறுப்பு, இந்த உலகத்தையே துன்பச் சுமையாக்கிவிடும். வெறுப்பே ஒரு சுமை. வெறுப்பு மிகமிகப் பளுவானது. ஆம்! வெறுக்கப்படுபவன் அழியும் வரையில் அவனை அழிப்பதற்குரிய காரியங்கள் செய்ய வேண்டுமே! அதனால், வெறுப்பு உடையாரிடம் மற்றவர்க்கு வெறுப்பன செய்யத்தான் நேரம் இருக்கும்; தாம் வாழ முடியாது.

வறுமை, பொல்லா வெகுட்சி, வெறுப்பு ஆகியன வாழ்க்கையின் எதிர்மறை இயல்புகளாக அமைந்தும் செல்வம், மகிழ்ச்சி முதலியன உடன்பாட்டு நிலையில் அமைந்தும் மானுட வாழ்க்கையை அரிப்பவை.