பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்
கற்றார்கள் உற்றோரும் காத லானை,

என்றார். கல்லாதார் மனம் இருள் நிறைந்தது. அறியாமையின் ஆதிக்கத்திலிருப்பது. ஆதலால் ஞானமே வடிவான அவனை, “கல்லாதார் மனத்தணுகாக் கடவுள்” என்றார். அடுத்து “கற்றார்கள் உற்றோருங் காதலான்” என்றார்.

கல்வி கற்றல் ஒரு கலை; சிறந்த பொழுதுபோக்கு. குறைந்த செலவில் நடைபெறக்கூடிய பொழுதுபோக்கு. அதுமட்டுமா? மனிதன் பூரணத்துவம் அடையவேண்டும். அதாவது அன்பு, ஆன்மா, உடல் மூன்றும் சம விகிதத்தில் பயன் நோக்கி வளரவேண்டும்.

தூய வாழ்வின் வழியில்தான் சரியான கல்வி கிடைக்கும். நூல்களைப் படித்தால் மட்டும் போதாது. அடுப்பில் எரியும் கட்டைகளைப் புரட்டிப் போட்டால் நெருப்பு நன்றாக எரியும். அதுபோலப் படித்த நூல்களை, செய்திகளை அசைபோடவேண்டும்; உரிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

திருநாவுக்கரசர் “உற்று, ஓர்தல்” என்றருளிச் செய்கின்றார். உற்று ஓர்தல் என்றால் கூர்ந்து ஆராய்தல், “நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்?” என்று ஆராய்ந்தறிதலைத்தான் உற்று ஓர்தல் என்று அப்பரடிகள் விளக்கியருளினார்.

இங்ஙனம் கற்றால்தான் ஏதம் களையலாம். ஆன்மா, ஆணவப் பிணைப்பு, இறைவன் திருவருள் ஆகியன பற்றி அறிந்து ஆராய்ந்து தெளிந்த சிந்தனைபெற்றுத் தெய்வம் தெளிதல் கல்வியின் பயன்.

ஆன்மாவின் அறிவு கருவிகளில் சிறந்தது சித்தம். சித்தம், சிந்தனை செய்தலுக்குப் பயன்படுவது. சிந்தனை சித்தத்தில் செறிய வேண்டும். அதாவது, சிவனடியில்