பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர்
137
 

தோய்ந்த சிந்தனை தேவை. சிவஞானத்தைச் சிந்திக்கும் இயல்பு, சித்தத்திற்கு மிகுதியும் உண்டு.

சிவனடியைச் சிந்திக்கும் பேறுபெற்ற மனிதர்கள் வறிதே வாழார். அவர்தம் வாழ்க்கைக்குக் குறிக்கோள் உண்டு. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை - பயனற்றது. அதனால் திருநாவுக்கரசர் “குறிக்கோள் இலாது கெட்டேன்” எனறார்.

மானுடப் பிறவி அமைந்தது விபத்தினால் அல்ல. இந்த வாழ்வியலில் ஓர் ஒழுங்கு இருக்கிறது. முறை பிறழாத நிகழ்ச்சியும் இருக்கிறது. இவற்றை உற்று நோக்கும்போதே, இந்த மானுட வாழ்வுக்கு ஏதோ குறிக்கோள் இருக்கவேண்டும் என்பதை உய்த்துணர முடிகிறது. அந்தக் குறிக்கோள்தான் என்ன?

குறைவிலிருந்து விடுதலை பெற்று நிறைவு பெறுதல்; குற்றங்களினின்று நீங்குதல் என்பதே. எனவே, நின்று ஒழுக வேண்டிய நெறியறிந்து அந்நெறி நின்று ஒழுகுதல் வேண்டும். அப்பரடிகள்,

செறிவிலேன் சிந்தை யுள்ளே
சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன்
கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லேன்
நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன்
ஆவடு துறையு ளானே!

(4.57.7)

என்று பாடுகிறார்.

செறிவு ஏன் கைகூடவில்லை? உயிர் வாழ்க்கை அனுபவம் விநோதமானது. வாழ்க்கை என்பது அடுப்பு. ஆசை என்ற தீ அந்த அடுப்பில் பற்றி எரிகிறது. ஆசையினால்