பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அடையும் துய்ப்பு, சொறி சிரங்கைச் சொரிந்தால் கிடைக்கும் சிறுபொழுது இன்பம் போன்றது.

ஆன்மா, இந்தச் சிறுபொழுது அனுபவ இன்பத்தையே சதமெனக் கருதி விளையாடுகிறது! எதுபோல? உலைப் பானையில் இளஞ்சூட்டில் விளையாடுகின்ற ஆமை போல! இளஞ்சூடாக இருந்த நீர் சில மணித் துளிகளில் கொதி நிலைக்கு மாறியதும் அதில் கிடக்கும் ஆமை அழிந்து விடும்.

அதுபோல ஆன்மா அழியலாகாது; தப்பித்து உய்தி பெறுதல் வேண்டும். உய்தி பெற என்ன வழி? சிவபெருமான் திருவடிகளை அன்பினால் நினைந்து குழைந்து வாழ்தலே உய்யும் வழி. மேலும்,

வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசு பதமருள் செய்தவன் பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புரந் தீவளைத் தான்தில்லை யம்பலத்துக்
கூத்தனுக் காட்பட் டிருப்பதன் றோநந்தன் கூழைமையே!

(4.81.5)

என்பார்.

பிறவியை இழிவெனக் கருதாதீர்! பிறவியைத் துன்பம் என எண்ணாதீர்! வாய்த்த இப்பிறவியை மதித்துப் போற்றி வாழ்மின்! தில்லைக் கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பதே கூழைமை - கடமை! இதுவே உய்யும் நெறி.

தொண்டு

ஆற்றல் மிக்க அன்பால் இறைவனைப் பலகாலும் அழைக்க வேண்டும். சிவன் திருவருளை நினையுமாறு நினைந்து வாழ்த்தவேண்டும். பக்தி, ஞானம் இவ்விரண்டின் பயன் தொண்டு. “தொண்டலால் உயிர்க்கு ஊதியமில்லை” என்றும் “தொண்டலால் துணையும் இல்லை” என்றும் அப்பரடிகள் விதந்து கூறுவார்.