பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கருதுகிறோமே, அவற்றையெல்லாம் ஏழாம் நூற்றாண்டிலேயே இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த நாவுக்கரசர் பெருமான் நமக்கு நினைவுறுத்திச் சென்றார் என்ற செய்தியை விளக்குவதே இத் தலைப்பின் நோக்கம்.

மல்லிகை மணக்காதது ஏன்?

சாக்ரடீசை நாடு தெரிந்து கொண்ட அளவிற்கு இங்கர் சாலை நாடு தெரிந்து கொண்ட அளவிற்கு நமது அப்பரடிகளைத் தெரிந்து கொள்ளவில்லை. இதற்குக் காரணம் தமிழர்கள் நன்றி கொன்றவர்களாகப் போனார்கள். அவர்கள் வீட்டுக் கொல்லையில் பூத்துக் குலுங்கி மணம் பரப்பும் மல்லிகை அவர்கட்குத் தெரியாமற்போயிற்று.

தன் வீட்டுக் கொல்லையில் இயல்பாய் மலர்ந்த இனிய அழகிய மல்லிகையைப் பறித்து அனுபவிக்கத் தெரியாமல் அடுத்த வீட்டுக்காரன் தோட்டத்தில் மலர்ந்த எட்டிப் பூவை நோக்கிப் போவதுபோல, நமது சமுதாயத்தின் போக்குப் போனமையின் காரணமாக ஏதாவதொரு புதிய கருத்து - புதிய சித்தாந்தம் என்றால் சாக்ரடீஸ் சொன்னார், இங்கர்சால் சொன்னார், பிளேட்டோ சொன்னார், என்று சொன்னால்தான் நாடு ஏற்றுக்கொள்ளும் என்ற ஒரு மனோபாவம், ஒரு மாயை வளர்ந்திருக்கிறது! இந்தக் குறையை நீக்கும் பொருட்டே 20ஆம் நூற்றாண்டில் நாம் எந்தச் செய்திகளைப் புதிய செய்திகள் என்று சொல்லுகிறோமோ அந்தச் செய்திகளை 7ஆம் நூற்றாண்டில் அப்பரடிகள் சொன்னார் என்பது இத்தலைப்பின் விழுமிய கருத்து.

சமுதாய வயலிலே

இங்கர்சால், பிளேட்டோ, சாக்ரடீஸ், போன்றவர்களைவிடச் சமுதாய சீர்திருத்தத்திற்குத் தகுதியுடைய