பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

143


பெரியார் அப்பரடிகள் என்பது நமது ஆழ்ந்த நம்பிக்கை. ஒன்றைத் திருத்தவேண்டும் என்று சொன்னால், அந்தக் கொள்கையில் நம்பிக்கையுடையவர்களே அதைத் திருத்த வேண்டும்; அவர்களால்தான் திருத்தவும் முடியும். அதில் நம்பிக்கையில்லாதவர்கள் திருத்தப்புகுவது வேடிக்கையாக, கேலிக்கூத்தாக, நகைப்புக்கிடமாகப் போய்விடும்.

“கழனிகளிலே களைபிடுங்க இறங்குகிறவன் முதலில் களை எது? விளையும் பயிர் எது? என்று தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையானால், பயிரையே களை என்று பிழையாகக் கருதிப் பிடுங்கிவிடுவான். இறுதியில் விரும்பிப் பாடுபட்ட விவசாயிக்கு எதுவும் மிஞ்சாது” என்று ஒரு சமயத்தில் பெர்னாட்ஷா மிக அழகாகக் கூறினார்.

நமது நாட்டிலே இன்று சீர்திருத்தம் என்ற பெயரால், தமிழகத்தில் தோன்றிய சமய சாத்திரங்களை முறையாகப் பயிலாதவர்கள், திருமுறைகளைத் தொட்டும் பார்க்காதவர்கள், அங்கொரு பாட்டும் இங்கொரு பாட்டுமாக மேலெழுந்தவாரியாகப் படித்துவிட்டு அதிலே சீர்திருத்தப் புயலை உருவாக்குகிறார்கள். எனவே, அவர்கள் விளை பயிருக்கு முட்டுக்கட்டையாகவுள்ள களையைப் பிடுங்கத் தகுதியுடையவர்கள் அல்லர். அப்பரடிகள் போன்றோர் நீண்டகாலப் பாரம்பரியம் உடையவர்கள். அவர்கள் காட்டும் புதுமையிலே கவர்ச்சி இருந்தது; ஆக்கம் இருந்தது; ஊக்கம் இருந்தது; உறுதி யிருந்தது; உயர்வு இருந்தது. அதே காலத்தில் பழமை என்ற அடித்தளம் அசைந்து ஆட்டம் காணாமலும் காப்பாற்றிக் கொண்டார்கள். ஒரு கட்டடத்திற்கு வண்ணம் பூசிக் கோலம் கொடுக்கவேண்டும் என்று முயலும்போது அந்தக் கட்டடத்தின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிடுமானால் நீடித்த நிலைபேறுடைய நலஞ்சார் நாகரிகம் இல்லாமலே போய்விடும்.