பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

145


அன்றுமுதல் இன்றுவரை தோன்றியுள்ள எல்லாக் கவிஞர்களும் அதையேதான் தொடர்ந்து பாடிக்கொண்டு வருகிறார்கள். புதிய தலைப்புக்களைப் புதிய சிந்தனைகளைப் பாடும் நிலைமை வரவில்லை. இந்தத் தலைமுறை ஒழுங்காக ஒரு காரியத்தைச் செய்து முடிக்கவேண்டும் என்று விரும்பினால், பழங்காலக் கவிதைகளில் வலியுறுத்திக் கூறப்பெற்றிருக்கிற அறநெறிகளை, ஒழுக்கக் கூறுகளை வாழ்க்கையில் நடைமுறைக்குக் கொணர்ந்து, புதிய சிந்தனைகள் புதிய செய்திகள் புதிய சித்தாந்தங்கள் தோன்றத் துணைபுரிய வேண்டும். வலியுறுத்திக் கூறப்பெறுகிற செய்திகளும் சிந்தனைகளும் சித்தாந்தங்களும் சிந்தனையோடு கலந்து செயல்முறைக்கு வராமையால் விண்வெளி பற்றிய செய்திகளும், வேறு வகையான செய்திகளும், உலக ஒருமைப்பாட்டுணர்வும் எண்ணங்களும் வளர வாய்ப்பில்லாமல் போயிற்று. இது ஒரு பெருங்குறைதான். இதையே அப்பரடிகள் எண்ணிப் பார்த்து ஒரு புதிய புரட்சியை நாடு முழுவதிலும் உண்டாக்கினார்.

சமயவழிப் போரியக்கமா? சமுதாய நலப் பேரியக்கமா?

அப்பரடிகளின் வரலாறு சோதனை நிறைந்த ஒரு வரலாறு. அவர் சமண பெளத்த நாகரிகம் பரவியிருந்த காலத்தில், அந்த நாகரிகத்தை எதிர்த்துப் போராடினார். அப்பரடிகள் பெளத்தத்தையும் சமணத்தையும் எதிர்த்தார். என்று சொல்லும்பொழுது அவருக்குச் சமயவெறி இருந்தது என்று யாரும் தவறாகக் கருதிவிடக்கூடாது. சமணத்தையும், பெளத்தத்தையும் அப்பரடிகள் எதிர்த்தார் என்பதாலேயே அவர் சமய ஒருமைப்பாட்டிற்கு அப்பாற்பட்டவர் என்று கருதிவிடக்கூடாது.

உலகச் சமயங்களுக்குள்ளே ஓர் ஒருமைப்பாடு வேண்டும் என்று விரும்பியவர் அப்பரடிகள். ஆனாலும் அவருடைய வீட்டு நாகரிகத்தை, சமுதாய நாகரிகத்தைப் பிற


கு.இ.VII.10