பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாகரிகம் வந்து ஆட்சி செய்வதை அவர் வெறுத்தார். அவர் நடத்திய போராட்டம் சமயப் போராட்டமே யன்று. நாம் நன்றாக எண்ணிப் பார்த்தால் 25 விழுக்காடுதான் அதனைச் சமயப் போராட்டம் என்று கூறலாம். பெளத்த சமண சமயங்களால் ஏற்பட்ட குழப்படியிலிருந்து சமுதாயத்தைக் காப்பாற்றும் முயற்சிதான் 75 விழுக்காடு.

இன்று கிழக்காசிய நாடுகளில் புத்த மதத்தின் வெளித்தோற்றம் இருக்கிறதே தவிர உள்ளீடில்லை. புத்த மதத்தின் போர்வையிலே வாழ்கிற கூட்டம் பெருகியிருக்கிறது. நியாயமாகப் பார்த்தால் புத்தரின் நெறியைக் கோடியில் ஒருவரே பின்பற்ற முடியும்.

தமிழகம் அத்தகைய போலி நடைமுறையை விரும்பவில்லை. இங்கு பெளத்தம் வந்தபோது தமிழர்களின் அடித்தளத்தையே தகர்த்தழிக்கும் நாகரிகமும் வந்தது. நல்ல பண்ணும் இசையும் கேட்கக்கூடாது என்பது சமணத்தின் முக்கிய நோக்கம். பண்ணோடு பிறந்த பைந்தமிழை, இசையோடு பிறந்த இன்பத் தமிழை மறந்து விட்டுத் தமிழர்கள் எப்படி வாழமுடியும்? எனவே தமிழ் நாகரிகத்தின் - தமிழ்ப் பண்பின் தனிப் பாடல்களைப் பாடினார்; பண்ணோடு இசை பரப்பினார். தமிழகத்தின் இசைத்தமிழ் வரலாற்றில் மறுமலர்ச்சியை உண்டாக்கினார்! பண்ணோடு கலந்த பாடலுக்குப் புத்துயிரூட்டினார்! ஆம்! சமண பெளத்த சமயங்களால் தமிழிசை அழிந்து போகாமல் காப்பாற்று வதற்காக அவர் ஒரு பேரியக்கமே நடத்தினார்!

தமிழ் இசை வெள்ளம்

இன்று தமிழிசை என்று கூறினால் நமக்குச் செட்டி நாட்டரசரின் நினைவு வரும். தெலுங்கிசை தமிழிசையை ஆக்கிரமித்தபொழுது தமிழிசையைக் காக்கச் செட்டி நாட்டரசர் செப்பரிய சீர்திருத்த இயக்கம் நடத்தினார்.