பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
147
 


ஏழாம் நூற்றாண்டில் தமிழிசைக்கு ஆபத்து வந்த பொழுது பண்ணோடு இசை கேட்காது அதைக் கேட்பது பாவம் என்று கூறிய காலத்தில் பண்ணோடு இசை பாடித் தமிழகத்தில் இசை வெள்ளம் பாய்ந்தோடச் செய்த பெருமை அப்பரடிகளையே சாரும்.

அடுத்து, இயற்கையோடு கலந்து வாழுகின்றவன் தமிழன். இவ்வாறு இயற்கையோடு உறவாடிக் கலந்து வாழுகின்ற தமிழனைப் பார்த்து “நீ, மலரைப் பார்க்காதே அந்த மலரின் மணத்தை நுகராதே அது பாவம்” என்று கூறினார்கள். தமிழர்கள் எப்படி இதை ஒத்துக்கொள்வார்கள்? எனவேதான் அப்பரடிகள் இயற்கையோடியைந்த பாடல்களைப் பாடினார். “மூரி முழங்கொலி நீரானான் கண்டாய்!” என்று இயற்கையை வியந்தார்; “காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்” என்பது போன்ற இயற்கை வருணனைகள் பலவற்றை நாம் ஐயாற்றுத் திருப்பதிகத்தில் காணலாம். இப்படி இயற்கையோடியைந்து மனித வாழ்க்கையை வளமாக்கிச் செழிப்பூட்டிடவே அப்பரடிகள் சமணத்தை எதிர்த்தார்.

அம்மையப்பன்

தமிழகம் இருபாலருக்கும், பெருமை கொடுத்துப் பெண்ணினத்தின் வாழ்க்கையைப் பெருமையாகவும் தகுதியாகவும் தரமாகவும் போற்றிக் காத்தது; காக்கின்றது; காக்கும். அதைத்தான் நாம், நான்மாடக்கூடலில், அங்கயற்கண்ணி ஆலயத்தில் பார்க்கிறோம். பெண்மையை இழிவுபடுத்தும் நாகரிகம் தமிழனுடையதன்று. தமிழனுடைய நாகரிகத்திலே எல்லாத் துறைகளிலும் பெண்மை உரிய பங்கும் பேசரிய பெருமையும் உயர்வும் கொடுத்துப் போற்றப்பெறுகிறது. பெண்மையை இழிவு படுத்துகிறவர்கள் சமணரும் பெளத்தரும் ஆவர். அவர்கள், இயற்கையோ டொத்து வாழும் தமிழினத்திற்குச் சிறிதும் ஒவ்வாதவர்கள்.