பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதனாலேயே திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் எழிலுற இயக்கும் அம்மையோடப்பனாம் அருள் நிலையில் இறைவனை அம்மையப்பனாகக் கண்டார்கள். பெண்மைக்கு இழிவு தரும் அநாகரிகத்தைத் தடுத்துக் காக்க முயன்றார்கள். இப்படி நாம் பார்க்கின்ற போதுதான்; நமது அப்பரடிகள் வெறும் நாகரிகத்திற்காகப் போராடவில்லை; தமிழ்ச் சமுதாயத்தினுடைய வீட்டு நாகரிகம் நாட்டு நாகரிகம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகவே போராடினார் - ஏன்? ஒரு மாபெரும் இயக்கமே நடத்தினார் என்பதை அறிகிறோம். அத்தகைய அப்பரடிகள் என்னென்ன விதமான கருத்துக்களிலே நமக்குப் புதுமை ஊட்டினார், எழுச்சி யூட்டினார், ஏற்றம் தேடித் தந்தார் என்பனவற்றையெல்லாம் நாம் ஆராய வேண்டும்.

அப்பரடிகளின் அறைகூவல்

நமது தமிழகத்தைப் பொறுத்தவரை நாம் முன்னே குறிப்பிட்டதுபோல் கடவுள் நம்பிக்கையில்லாத - வாழ்க்கையோடு இணைந்து வாராத நாகரிகங்களைத் தூக்கிக் கொண்டு வந்த, பெளத்த சமண நாகரிகங்கள் தலைதுாக்கி நின்ற காலம் ஏழாம் நூற்றாண்டு. இந்த பெளத்த சமண நாகரிகங்களைத் தடுத்து நிறுத்தித் தமிழினத்தின் தொன்மையான சொந்த நாகரிகத்தைக் காக்க வேண்டுமென்பற்காகத் தெருத் தெருவாக ஊர் ஊராகச் சுற்றி வந்தார் அப்பரடிகள். அவர் அப்படிச் சென்றபொழுது பல இடங்களில் அவருடைய கருத்துக்களைச் செவி கொடுத்துக் கேட்கக்கூட ஆட்கள் இருக்கவில்லை என்று தெரிகிறது.

‘மனிதர்காள்! இங்கு வம்மொன்று சொல்லுகேன்’ என்று உரத்த குரலில் ஊர் மக்கட்கு அழைப்பு விடுத்து, அவர் தமது கருத்துக்களைச் சொல்லத் தொடங்குகிற நேரத்தில், அவசரக்காரர்களாக உள்ள பலர் எழுந்து போகத் தொடங்கி