பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
158
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

வர்களின் வாழ்க்கை நமக்கு இந்த உண்மையைத் தெளிவாக உணர்த்துகிறது.

தாமஸ் உல்சி அரசியல் தந்திரத்தில் சமபலக் கொள்கையைக் கையாண்டு சிறப்புடன் செயலாற்றினான்; ஆனால் அரசனுக்கே உழைத்தான். சிந்தனையிலும் பரம்பொருளை நினைக்கவில்லை. ஆனால் அரசன் அவனை முதுமைக் காலத்தில் கைவிட்டுவிட்டான். இறைவன்தானே என்றும் துணைவன்? நன்மையிலும் தீமையிலும் துணைவன். அரசனால் கைவிடப்பட்ட உல்சி வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருந்தான். முதுமைப் பருவத்தின் தொல்லை; வாழ்க்கை வளமனை வாழ்க்கையல்ல - குடிசை வாழ்க்கை; அப்போது அவன், “நான் அரசனுக்குச் செய்த சேவையில் ஒரு சிறு பகுதியையாவது ஆண்டவனுக்குச் செய்திருந்தால் நான் எனது இறுதிக் காலத்தில் இப்படி அனாதையாக நிற்க நேரிட்டிருக்காது” என்று இரங்கிக் கூறுகிறான். ஆம்; அவன் இளமைக் காலத்துப் பிழை வாழ்க்கை, நடுவிலே போராட்டமாக ஆகி, இறுதிக் காலத்தில் கழிவிரக்கமாக மாறியதைக் காண்கிறோம். இந்தக் கருத்துக்கு அணி செய்வது போல் அமைந்திருக்கிறது,

பாலனாய்க் கழிந்த நாளும்
பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும்
மெலிவுடன் மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும்
குறிக்கோள் இலாது கெட்டேன்,

என்ற அப்பரடிகளின் பாடல். மனிதப் பிறவி கிடைத்தற்கரிய பிறவி, அதைக் குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்து கெட்டொழித்து விடலாமா? எனவே வாழ்க்கையில் குழந்தைகளாக இருக்கும் பொழுதே அவர்கட்கு நல்ல இலட்சியத்தை - குறிக்கோளை ஊட்ட வேண்டும். அந்த