பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
159
 

வயதுக்கும், உணர்வுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ப மிக்குயர்ந்த இலட்சிய உணர்வை ஊட்டவேண்டும். அடுத்து இளமைப் பருவம். அதைத்தான் “பனிமலர்க்கோதை மார்தம் மேலனாய்க் கழிந்த நாள்” என்ற அப்பரடிகள் பேசுகிறார். அவ்வாறு இல்லற வாழ்வில், துணைவியோடு வாழும் போதும் ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை கெட்டுப் போகும். இல்லற வாழ்க்கையில் என்ன குறிக்கோள் இருக்க முடியும் என்று கேட்கலாம். நன்றாக உளமொத்து வாழ்ந்து அந்த உளமொத்த வாழ்க்கையிலே நல்ல நீண்ட நெடும் பாரம்பரியத்தை உண்டாக்குகிற நன்மக்கட்பேற்றைப் பெறுவது குறிக்கோளாக அமைய வேண்டும். அப்படியில்லாமல் வெறும் உணர்ச்சிக்காக - மனப்பிராந்திக்காக இந்த வாழ்க்கை என்று கருதக்கூடாது; அது இல்லற வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கக்கூடாது. மூப்பொடு மெலிவு வந்து, கோலனாய்க் கோல் ஊன்றி நடக்கும் காலம் மூன்றாவது பருவம் - இறுதிப் பருவம். அப்போதும் குறிக்கோள் வேண்டும் என்று கூறுகிறார்.

மனம்போல் வாழ்வு

பருவுடல் தோற்றத்தால் மட்டும் ஒருவன் மனிதனாகி விடுவதில்லை. அவனுடைய உள்ளீடு என்ன? ஆன்ம நலம் என்ன? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆன்ம நலம் இல்லாமற் போனால், மனிதனும் வெறும் பாடைத் தேங்காய் போலப் பயனற்றவனாய் விடுகிறான். வெறும் பாடைத் தேங்காயாவது அடுப்பு எரிக்கப் பயன்படும். ஆனால் குறிக்கோளிலா மனிதனால் என்ன பயன்? இந்த நிலையை வைத்துக் கொண்டுதான் நமது அப்பரடிகள் போன்றோர், வாழ்க்கையின் உயர்ந்த - சிறந்த சிந்தனைகளைப் பார்த்தார்கள். உயர்ந்த சிந்தனைகளையுடைய மேலான வாழ்க்கையை உண்டாக்க அப்பரடிகள் விரும்பினார்.