பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
160
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 


‘இனியன நினையாதார்க்கு இன்னாதான்’ என்று அப்பரடிகள் பேசுகின்றார். நிலத்திலே நீர் ஊற்று இருப்பது போல், மனிதனிடத்தில் நினைப்பு ஊற்று இருக்கிறது. நினைப்பு நல்லதாக இருந்தால் அவன் நல்லவனாகிறான். பொதுவாகப் பகல் 12 மணிக்கு நாம் ஒரு நல்ல விருந்து படைக்க வேண்டுமென்று விரும்பினால், காலை 8 மணிக்கே சமையற்கட்டுக்கு நல்ல சரக்குகளைக் கொடுக்கவேண்டும். சமையற்கட்டுக்கு நாற்றம் பிடித்த அரிசியையும் பூச்சி வைத்துக் கெட்டுப்போன கத்தரிக்காயையும் கொடுத்து விட்டு 12 மணி விருந்துக்கு நல்ல சாப்பாடு வேண்டுமென்றால் ஒரு பொழுதும் வராது. சமையற்கட்டுக்குக் கொடுக்கப்பெற்ற சரக்குகளுக்கு ஏற்பவே பந்தியிலே விருந்து அமையும். அதுபோல, நமது இதயம் என்ற சமையற் கட்டில், ஏற்றப்பெற்ற எண்ணம் என்ற சரக்குகளுக்கு ஏற்பத்தான் சமுதாய வாழ்க்கை அமையும். இதயத்தில் எதை ஏற்றினோம் என்பதுதான் முக்கியம். அன்பு, ஒப்புரவு, ஈகை, இரக்கம், கண்ணோட்டம் முதலிய உணர்வுகளை ஏற்றினால் நாம் தூய மனிதராக - உலகிற் சிறந்த மனிதராக விளங்க முடியும். இல்லையானால், நமது வாழ்க்கை நரக வாழ்க்கையாகவே மாறிவிடும். ஒரு விலங்கு கொடுமையுடையதாக இருந்தால் கூட அவ்வளவு தீமையில்லை. ஒரு மனிதன் கொடியவனாக இருந்தால் அவன் மனித சமுதாயத்தையே பிடித்து ஆட்டி அலைக்கழிக்கிற பேய் போல ஆகிவிடுவான். ஆகையினால் தான் மனிதர்கள் தங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும்; இனியன எண்ணவேண்டும் என்று அப்பரடிகள் கூறினார்.

கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர்!

வஞ்ச ஆறு வற்றினால் பக்தி ஆறு பெருக்கெடுத்தோடும் என்கிறார் அப்பரடிகள். ஒரு பாத்திரத்தில், எதையாவது ஒன்றை வைத்துக் கொண்டு அதன் மேலே