பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதன் முழுப் பயனை நாம் இனிமேல்தான் காணவேண்டும். எங்கே தீண்டாமை குடி புகுந்து கொண்டு சமுதாயத்தைக் கெடுத்ததோ அங்கே இன்றும் சாதீய எண்ணங்களும் சாதீய உணர்ச்சிகளுமே இருந்து வருகின்றன. இருப்பதற்கேற்ற சூழ்நிலைதான் இருந்து வருகிறது. பொதுவான எந்த ஒன்றையும் மக்கள் மன்றத்தில் வைத்து மக்களை அதற்குத் தயார் செய்ய வேண்டுமே தவிர, அரசு தானாக இயக்கினால் உரிய பயன் இல்லாமற் போகும். அதுமட்டுமல்ல, அந்த இயக்கமும் வலுவற்றுப் போகும்.

சமய வாழ்வில் சமுதாய உணர்வு

நம்முடைய நாட்டு அரசர்கள் இரண்டு தவறுகளைச் செய்தார்கள். அதனாலேயே நம்முடைய சமய வளர்ச்சி தடைப்பட்டிருக்கிறதோ என்று நான் ஐயப்படுகிறேன். ஒன்று அரசர்கள் அவர்களாகவே கோயில்களைக் கட்டியது. அவர்களாகக் கோயில்களைக் கட்டியமையின் காரணமாக, அங்கு வாழும் மக்களிடத்திலே, “இது நம்முடைய சொத்து; இதை நாம் பேணிக் காக்க வேண்டும்; சுற்றுச் சுவர்களிலும், கோபுரங்களிலும் முளைக்கின்ற மரங்களை நாம் வெட்டியெறிய வேண்டும்” என்று கருதுகிற சூழல் இல்லை. அதை அனாதைச் சொத்தாகக் கருதுகிற நிலைக்கு மக்கள் தயாராகிவிட்டார்கள். கோயில், தர்மகர்த்தாவுக்குச் சொந்தம் என்று மக்கள் கருதுகிறார்கள். தர்மகர்த்தாவோ கிடைத்த வரை இலாபம் என்று கருதுகிறார். அவரிடமும் சமுதாய உணர்ச்சி வரவில்லை. காரணம், அந்தக் கோயில் சமுதாயத்தினால் எழுப்பப் பெறவில்லை என்பதுதான்! தயவு செய்து யாரும் தவறாகக் கருதிக் கொள்ளக்கூடாது. நான் குலோத்துங்க சோழனைப் பாராட்டுகிறேன்; இராஜராஜ சோழனைப் பாராட்டுகிறேன்; பாண்டியனைப் பாராட்டுகிறேன். ஆனாலும், அவர்கள் இந்தச் சமுதாயத்தைப் பார்த்து, ‘இந்த ஊருக்கு ஒரு கோயில் தேவை: அதை நீங்கள் கட்டிக் கொள்ளுங்கள்’ என்று கூறியிருந்தால், அந்த மக்களையே