பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




ஒரு நாலாயிரம் மக்கள்! அவர்கள் மத்தியில் ஒரு கோயில். அந்த நாலாயிரம் மக்களின் குடும்பப் பொறுப்பாக அந்தக் கோயில் இருக்கவேண்டும். அந்த மக்களின் பொறுப்பாகவே அவர்களைச் சார்ந்த திருமடம் இயங்க வேண்டும் என்ற ஒரு நிலைமை இருக்குமானால், நமது சமய நிலையங்களுக்கும் மக்களுக்குமிடையே இடைவெளி ஏற்பட்டிருக்குமா? தொடர்பு குறைந்திருக்குமா?

கோயில்களுக்கும் திருமடங்களுக்கும் ஒரு நிரந்தரமான மூலதனம் ஏற்பட்டுவிட்டதால், அங்கு மக்கள் வந்தாலும் வராவிட்டாலும் அவை அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மக்களை வரவழைக்க வேண்டுமென்று விரும்பினால், கச்சேரிகள், விழாக்கள் மூலம் கூட்டம் சேர்த்து விடுகிறார்கள். அலங்காரங்கள், கச்சேரிகள், களிநடனங்கள் இவையனைத்தும், மக்கள் கூட்டம் குறைந்தபோது, அவர்களைக் கவர்வதற்காக - கூட்டம் வரவேண்டும் என்பதற்காக - ஏற்படுத்தப்பெற்ற சப்பைக் கட்டுக்களாக, சாதனங்களாகவே மாறிவிட்டன. இவை நிரந்தரமான புரட்சியை ஏற்படுத்தவில்லை. மக்கள் மன்றத்தில்தான் சமய நிலையங்கள் இருக்கவேண்டும்; மக்கள் மன்றத்தின் தொடர்பில்தான் அவை இயங்கவேண்டும் என்று நமது அப்பரடிகள் கருதினார். எனவே, இவர் ஒரு மாசில்லாத தூய துறவியாகக் காட்சியளித்தார். “ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கினார்”. அவர் உழவாரத் திருப்பணி செய்கின்றபொழுது, பொன்னும் மணிகளும் கிளம்பின. அப்பரடிகள் அவற்றையெல்லாம் ஒக்கவே நோக்கினார்; ஆம்! செம்பொன்னையும் ஓட்டையும் ஒரே மாதிரியாகப் பாவித்தார். இப்பொழுது நம்மிற் பலர் ஓட்டைக்கூடச் செம்பொன்னாகப் பார்க்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள். அப்பரடிகளின் வாழ்க்கை தூய களங்கமில்லாத வாழ்க்கை “கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி” வேறொன்றும் வேண்டாத வியத்தகு வித்தகத் துறவு அப்பரடிகளின்